

வேலூர்: வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சாலை வசதிகள் சரியில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் மண் சாலைகள் அனைத்தும் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. இந்த சாலைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகிவிட்டது.போதாக்குறைக்கு பாதாள சாக்கடை திட்டம் காரணமாக நன்றாக இருந்த சாலைகள் கூட தற்போது படுமோசமாகி விட்டதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
வேலூர் மாநகராட்சி செயல்பாடு குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு நடத்திய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சாலைகள் பராமரிப்பு சரியில்லை, மாநகராட்சியின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என வெளிப்படையாக அதிகாரிகளை எச்சரித்தார். மேலும், சாலைகள் அமைப்பதற்கு முன்பாக மழைநீர் வடிகால் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
அமைச்சர் கூறினால் என்ன? பொதுமக்கள் கூறினால் என்ன? அதை நாங்கள் ஏன்? பின்பற்ற வேண்டும் என்ற நிலையில் தான் வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளனர். சாலை சரியில்லை என பொதுமக்கள் கூறினால், சாலை அமைக்க ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனத்தை காரணம் காட்டி எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை அவர்கள்தான் அனைத்துக்கும் பொறுப்பு என தங்கள் கடமையை தட்டிக்கழித்து விடுகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை பணிகளை ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் எங்களுக்கு தலைமை செயலகம்வரை ஆதரவு உள்ளது. எங்கள் ஒப்பந்த காலம் முடியும்வரை எங்களை ஒன்றும் செய்ய முடியாது என கூறுவதால் மாநகராட்சி அதிகாரிகளே அவர்களை நிர்ப்பந்தம் செய்யமுடியாமல் தவிப்பதாக அதிகாரிகளே ஆதங்கப்பட்டு கூறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதனால், எந்த ஒரு வேலையும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகளுக்கான விதிமுறைகள் காற்றில் பறக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி ஆகிவிட்டது என பெருமை அடித்துக்கொண்டாலும், அதற்கு ஏற்றார்போல் ஒன்றும் நடக்க வில்லை. அடிப்படை வசதிகள் கேள்விக் குறியாகவே உள்ளன. மாநகராட்சி 2-வது மண்டலத்துக்குட்பட்ட 21, 22, 23, 24, 25 ஆகிய 5 வார்டுகளுக் குட்பட்ட செங்கா நத்தம், தியாகராஜ புரம், பகுதி 5 போன்ற இடங் களில் உள்ள சாலைகளில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால், இதில் பெரும்பாலான இடங்களில் கால்வாய் வசதிகள் அமைக்கப்பட வில்லை.
கால்வாய் ஏற்படுத்தாமலேயே இங்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கற்கள் மீது ‘வைப்ரேசன் ரோலர்' உபயோகிக்காமல் வெறுமனே போட்டு விட்டு செல்வதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த வார்டுகளின் பெரும்பகுதி சாலைகள் சேதமடைந்துள்ளன. ஆனால், எல்லா இடங்களையும் சரி செய்வதாக கூறி விட்டு ஓரிரு இடங்களில் மட்டுமே சாலை போடப்படுகிறது. பல இடங்களில் அரை அடி பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது.
அதேபோல, பேஸ்-4 வனத்துறை அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு தனி தீவுப்போல் உள்ளது. இந்த பகுதியில் சிதிலமடைந்துள்ள அரசு குடியிருப்பு பகுதிகளில் கால்நடைகள் கட்டியிருப்பதால் மழைநீருடன், கால்நடை கழிவுகளும் கலந்து அப்பகுதியில் குட்டைப்போல் தேங்கியுள்ளது. இதனால், அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.
இதேபோல, முதலாவது மண்டலத்துக்குட்பட்ட 14-வது வார்டுக்கு உட்பட்ட காட்பாடி காந்திநகர் பகுதியில் ராதாகிருஷ்ணன் நகர் மற்றும் விவேகானந்தர் தெரு மற்றும் விருதம்பட்டு 15-வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர், நேதாஜி நகர், பூங்காவனம் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களின் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மழை பெய்யும்போதெல்லாம் அந்த சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
வடிகால்வாய் இல்லாததால் உடனடியாக மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த சாலைகளில் பயணிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்’’ என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது ‘மக்கள் சிரமத்தை தவிர்க்கவே சாலை போடும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. விரைவில், அனைத்து இடங்களிலும் அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தி தரப்படும்’ என்றனர்.