Published : 04 Oct 2023 07:55 PM
Last Updated : 04 Oct 2023 07:55 PM

குப்பை அள்ளுவதிலும் மாநகராட்சி - அரசு மருத்துவமனை மோதல்: தூர்நாற்றம் வீசுவதால் மதுரை மக்கள் பாதிப்பு

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: ‘குப்பை’களை அள்ளுவதிலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை - மாநகராட்சி இடையே நீடிக்கும் மோதலால் குப்பைகள் அள்ளப்படாமல் தேக்கமடைந்து, மருத்துவமனை வளாகத்தில் தூர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

மதுரை அரசு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை, மருத்துவமனையின் தனியார் ஒப்பந்த நிறுவன தூய்மைப் பணியாளர்கள் சேகரித்து பிரேதபரிசோதனை கட்டிடம் அருகே உள்ள மருத்துவமனை குப்பை தொட்டிகளில் போடுகின்றனர். நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசப்படும் ‘பயோ மெடிக்கல்’ (Bio Medical) கழிவுகளை தனியாக சேகரித்து அதனை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். ஆனால், அந்த கழிவுகளையும், இந்த குப்பை தொட்டியில் போடுவதாக மாநகராட்சி சுகாதாரத்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். அதனால், குப்பை அள்ளுவதில் மாநகராட்சிக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் இடையே கடந்த பல ஆண்டாகவே தீர்க்க முடியாத மோதல் நீடித்து வருகிறது.

அதனால், அடிக்கடி மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மருத்துவமனை குப்பைகளை அள்ளாமல் போட்டுவிடுவதும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிந்து சிதறி கிடப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த குப்பை தொட்டிகள் அருகேதான் பிரேதபரிசோதனை கூடம் உள்ளது. தினமும் பிரேதபரிசோதனையில் 20க்கும் மேற்பட்ட உடல்களுக்கு பரிசோதனை நடக்கிறது. அந்த உடல்களை வாங்குவதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவினர்கள் வந்து செல்கிறார்கள்.

அவர்கள், உடல்களை வாங்குவதற்கு அப்பகுதியில் காத்திருக்க முடியாத அளவிற்கு அப்பகுதியில் நிரம்பி வழியும் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த குப்பை தொட்டிகள் அருகேதான் குழந்தைகள் வார்டும் உள்ளது. குப்பை தொட்டிகளில் அள்ளப்படாமல் உள்ள குப்பைகள் மழையிலும், வெயிலிலும் நனைந்து தூர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் மாடுகள், தெருநாய்கள் அந்த குப்பைகளை கிளறிவிடுகின்றன. அதானல், குப்பை தொட்டிகளில் இருந்து நாலாபுறமும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன.

சமீபத்தில் கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகத்துக்கும், மாநகராட்சிக்கும் இடையே இருந்த மோதல் இன்னும் அதிகமானது. அந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மருத்துவமனை வளாகத்தில் குவியும் ‘குப்பை’களை அள்ளுவதிலும் தற்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மாநகராட்சி தரப்பினர் கூறுகையில், ‘‘குப்பை தொட்டிகளில் மருந்து ஊசிகள், மருத்துவர்கள் பயன்படுத்திய கையுறைகள், நோயாளிகளுக்கு பயன்படுத்தி தூக்கி வீசியேறியப்படும் மருந்துவக் கழிவுகள் போன்ற பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டபடுவதால் அதனை அப்புறப்படுத்தும் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலமுறை சொல்லியும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்வதில்லை’’என்றனர்.

மருத்துவமனை தரப்பினரோ, ‘‘மருத்துவமனையில் தினமும் சேகரித்து வைக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி பணியாளர்கள் எடுக்க வருவதில்லை, சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கூறினாலும் அவர்கள் குப்பை அள்ளாமல் இருப்பதற்கு ஏதாவது எங்கள் மீது குறைசொல்லி தப்பிக்க பார்க்கிறார்கள். மருத்துவக்கழிவுகள் பாதுகாப்பாகதான் வெளியேற்றப்படுகிறது. கடைசியில் நோயாளிகள், மருத்துவமனைக்கு வரும் பார்வையாளர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், நேரடியாக மருத்துவமனை வளாகத்திற்கு சென்று அங்குள்ள பிரச்சனைகளை ஆய்வு செய்து நோயாளிகளுக்கு இந்த குப்பை பிரச்சனையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்து அன்றாடம் குப்பைகளை தரம் பிரித்து பாதுகாப்பாக தூய்மைப்பணியாளர்கள் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x