Last Updated : 03 Aug, 2023 04:51 AM

 

Published : 03 Aug 2023 04:51 AM
Last Updated : 03 Aug 2023 04:51 AM

மூலிகை செடிகள் மற்றும் மலர் கண்காட்சியுடன் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா தொடக்கம்

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவில் ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட கங்காரு, சோட்டா பீம் உருவம். படங்கள்: கி.பார்த்திபன்

நாமக்கல்: கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி விழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவுக்கு, நாமக்கல் கோட்டாட்சியர் சரவணன் தலைமை வகித்தார். விழாவை, சேந்தமங்கலம் எம்எல்ஏ கு.பொன்னுசாமி தொடங்கிவைத்து வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து, கலை பண்பாட்டுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறைகளின் சார்பில் மலைவாழ் மக்களின் பராம்பரிய கலை நிகழ்ச்சி, மங்கள இசை, தெருக்கூத்து, கும்மியாட்டம், பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல், நாடகம், கோலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

முன்னதாக, தோட்டக்கலைத் துறையின் சார்பில் கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சி மற்றும் மூலிகைப் பயிர்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில், குழந்தைகளைக் கவரும் வகையில் 40,000 ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட சோட்டா பீம், 15,000 பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் படுக்கை மற்றும் மலர் அலங்கார கண்ணாடி மாளிகை இடம் பெற்றிருந்தன.

மேலும், 25,000 ரோஜா மலர்களால் வடிவமைக்கப்பட்ட கங்காரு உருவம், 20,000 மலர்களால் வடிவமைக்கப்பட்ட முயல் உருவம், 15,000 மலர்களால் அமைக்கப்பட்ட இருதய வடிவம், ஆசிய ஹாக்கி சாம்பியன் அடையாளச் சின்னமான பொம்மன் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை பார்வையாளர்களை ஈர்த்தன. இன்று (4-ம் தேதி) நிறைவு விழா நடைபெற உள்ளது.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.கணேசன், சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x