Last Updated : 11 Jul, 2023 04:06 PM

 

Published : 11 Jul 2023 04:06 PM
Last Updated : 11 Jul 2023 04:06 PM

குப்பை கழிவு கொட்டும் இடமாக மாறிய சென்னாம்பேட்டை பாலாறு பகுதி

வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பாலாறு பகுதியில் குப்பை கழிவுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் புகை மூட்டமாக மாறியுள்ளது.

வாணியம்பாடி: வாணியம்பாடி நகராட்சி மற்றும் உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக சென்னாம்பேட்டை பாலாறு பகுதி மாறியுள்ளது.

இது மட்டுமின்றி நகராட்சி தூய்மைப் பணியாளர்களே பாலாற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளுக்கு தீயிட்டு வருவதால் காற்று மாசு ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியின் பெரும்பாலான பகுதி பாலாற்றையொட்டி உள்ளது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன.

இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் நூருல்லாபேட்டை, ராமைய்யன்தோப்பு, வளையாம்பட்டு என மொத்தம் 4 இடங்களில் குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இருந்தாலும், குப்பை கழிவுகளை சேகரிக்கும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அதை திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படும் இடத்துக்கு எடுத்துச் செல்லாமல் அருகாமையில் உள்ள பாலாறு பகுதியில் கொட்டி வருவதால் பாலாறு மாசடைந்து வருவதாகவும், அவ்வாறு கொட்டப்படும் குப்பை கழிவுகளுக்கு நகராட்சி ஊழியர்களே தீயிட்டு கொளுத்தி வருவதால் காற்று மாசு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து வாணியம்பாடியைச் சேர்ந்த அப்துல்கலாம் பசுமை புரட்சி அறக் கட்டளையின் நிர்வாகி சேது ராமன், "இந்து தமிழ் திசை" செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘வாணியம்பாடி நகராட்சி வார்டு எண் 1 முதல் வார்டு எண் 5 வரை உள்ள பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கழிவு கள் காலை 9 மணிக்கு மேல் சென்னாம்பேட்டை பாலாறு பகுதியில் கொட்டப்பட்டு வரு கிறது. சென்னாம்பேட்டை பாலாறு பகுதியையொட்டி 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

கடந்த 1991-ம் ஆண்டு 1997-ம் ஆண்டு கனமழை காரணமாக சென்னாம்பேட்டை பாலாறு பகுதியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால், இங்கிருந்த வீடுகள் அப்போது அகற்றப்பட்டு பாலாறு மீட்டெடுக்கப்பட்டது. ஆனால், தற்போது மீட்டெடுக்கப்பட்ட இடம் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. பாலாற்றில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பகுதி குப்பை கழிவுகளால் சூழ்ந்துள்ளன. கடந்தாண்டு பெய்த கனமழையின் போது சென்னாம்பேட்டை பாலாறு பகுதி வழியாக 250 டிஎம்சி தண்ணீர் சென்றது.

தற்போது, தண்ணீர் செல்லும் இடங்கள் குப்பை கழிவுகளால் சூழப்பட்டுள்ளன. அடுத்து மீண்டும் கனமழை பெய்தால் சென்னாம்பேட்டை பாலாறு வழியாக வரும் தண்ணீரில் குப்பை கழிவுகளும் அடித்து பாலாறு முழுவதும் குப்பை கழிவு கலந்த தண்ணீராக பாயும் நிலை உருவாகும். வாணியம் பாடி நகராட்சி மட்டுமின்றி, சென்னாம்பேட்டை பாலாற்றையொட்டியுள்ள உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளும் இதே பாலாறு பகுதியில் கொட்டப்படுகின்றன.

சேது ராமன்

பாலாற்றை மீட்க பல அமைப்பு கள் போராடி வரும் நேரத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் மாறி, மாறி குப்பை கழிவுகளை கொட்டி பாலாற்றின் அடையாளமே தெரியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். ஏற்கெனவே, தோல் கழிவுகள் வெளியேற்றப்பட்டு பாலாற்றின் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளன. இந்நிலையில், பாலாறு பகுதியில் குப்பை கழிவுகளை டன் கணக்கில் கொட்டி, பாலாற்றை மேலும் பாழாக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்படுவது வேதனையளிப்பதாக உள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அலுவ லகத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்தும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. பாலாற்றில் குப்பை கழிவுகளை கொட்டுவது மட்டும் அல்லாமல் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குப்பை கழிவுகளுக்கு நகராட்சி ஊழியர்களே தீ வைத்து எரிக்கின்றனர்.

குப்பைகளோடு பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்த்து எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும். மாசுக் கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளும் பாலாற்றில் எந்த ஒரு கழிவுகளும் கொட்டாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இது குறித்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபால கிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘பாலாற்றில் எந்த ஒரு கழிவுகளும் கொட்டக்கூடாது, கழிவுநீர் வெளியேற்றக்கூடாது என பலமுறை எச்சரித்துள்ளோம். இதையும் மீறி ஒரு சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. சென்னாம்பேட்டை பாலாறு பகுதியில் உடனடியாக ஆய்வு நடத்தி, குப்பை கழிவுகளை கொட்டி எரித்து வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x