Published : 02 Jul 2023 12:56 PM
Last Updated : 02 Jul 2023 12:56 PM

வேலூர் | குப்பை தொட்டியாக மாறிய கானாறு தடுப்பணை

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகே குப்பைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.படங்கள் : வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் கானாறு தடுப்பணை பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தினசரி குப்பை கொட்டி தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

கடந்த 2007-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி தரம் உயர்த்திய பிறகு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், சுற்றுலா, வியாபாரம் என பல்வேறு வகைகளில் வேலூருக்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன் வேலூர் மாநகருக்குள் குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாநகராட்சி 60 வார்டுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் அடிப்படை வசதிகள் பெரியளவில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.

வேலூர் மாநகராட்சியில் சுமார் ரூ.1,000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் தரமான சாலைகள், முழுமையான குடிநீர் வசதி, தூய்மையான நகரம் என்ற நிலையை அடைய முடியவில்லை.

வேலூர் மாநகராட்சியை பொருத்தவரை திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் விருது பெற்ற மாநகராட்சியாக உள்ளது. வீடு, வீடாக குப்பையை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதுடன் நகரில் எங்குமே குப்பைத் தொட்டி இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

1.50 லட்சம் குடியிருப்புகள்: வேலூர் மாநகராட்சியில் எங்குமே குப்பை தொட்டியை பார்க்க முடியாது என்றாலும், குப்பை கொட்டும் இடங்கள் பல இடங்களில் பார்க்க முடிகிறது. இதில், குப்பை கொட்டப்படும் இடங்களில் அப்படியே எரிக்கப்பட்டு வருவது அல்லது வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை கொட்டி எரிப்பதும் தொடர்கிறது.

வேலூர் மாநகராட்சியின் நிர்வாக தரவுகளின்படி 60 வார்டுகளில் மொத்தமுள்ள வீடுகளில் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 261. மொத்த வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 169. தினசரி உருவாகும் திடக்கழிவு அளவு 241 டன். இதில், மக்கும் குப்பை 128 டன், மக்காத குப்பை 90 டன், பிற கழிவுகள் 23 டன் ஆகும்.

தினசரி வீடுகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக சேகரிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறையாக உள்ளது. ஆனால், தினசரி குப்பை அகற்றும் பணி நடக்காமல் இரண்டு நாட்கள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை சேகரிக்கின்றனர். இதனால், வீடுகளில் தேங்கும் குப்பையை பலர் அருகில் உள்ள காலி இடங்களில் கொட்டி வருகின்றனர்.

அவற்றை அகற்ற முடியாது என்பதால் வீடுகளில் குப்பை சேகரிக்க வரும் நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள் அங்கேயே தீயிட்டு எரித்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மைக்கான விருது பெற்ற மாநகராட்சியில் குப்பை எரிப்பதுதான் இப்போது வாடிக்கையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

குப்பை தொட்டியான தடுப்பணை: வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதியில் முத்துமாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் அருகில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. வேலூர் சத்துவாச்சாரி மலை பகுதியில் இருந்து வரும் மழைநீர் கானாறு தேசிய நெடுஞ்சாலையை கடந்து பாலாற்றில் கலக்கும் வகையில் உள்ளது.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் கானாற்றில் தண்ணீர் வரத்து இருப்பதால் அந்த பகுதி எப்போதும் பச்சைப் பசேல் என்றிருக்கும். தடுப்பணையில் தேங்கும் மழைநீரால் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதை எல்லாம் கண்டுகொள்ளாத தூய்மைப் பணியாளர்கள் தடுப்பணை பகுதியில் குப்பை கொட்டி தீயிட்டு எரித்துச் செல்கின்றனர்.

ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இது நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘சத்துவாச்சாரி பேஸ்-1 பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பையை தூய்மைப் பணியாளர்கள் தடுப்பணை, கானாறு பகுதியில் கொட்டுகின்றனர். சில நேரங்களில் வாரிச் செல்கின்றனர். பல நேரங்களில் குப்பையை கொளுத்திவிட்டு கவலை இல்லாமல் செல்கின்றனர்.

பல வகையான குப்பையை எரிப்பதால் சுற்றியுள்ள வீடுகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. தினசரி காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை இப்படித்தான் நடக்கிறது.

பன்றிகள் தொல்லை: தினசரி குப்பை கொட்டுவதால் நாய்கள், பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. குப்பையில் கிடைக்கும் உணவுகளால் அவை இங்கேயே சுற்றித்திரிகின்றன. வெளியில்குழந்தைகளுடன் நடமாட அச்சமாக உள்ளது. இதற்கு, மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களே காரணம். நீர்நிலை பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என அரசுதான் கூறுகிறது. ஆனால், அரசின் இயந்திரமான மாநகராட்சி நிர்வாகம் அதையெல்லாம் பின்பற்றுவதில்லை’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x