Published : 30 Jun 2023 05:27 PM
Last Updated : 30 Jun 2023 05:27 PM

பல்லவன் கட்டிய கால்வாய்க்கு ‘பைபாஸ்’ - பரந்தூர் விமான நிலையத்தால் பாதிப்பா?

காஞ்சிபுரம்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி உட்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 85 ஏரிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குவது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கம்பக் கால்வாய். இது கம்ப வர்மன் என்ற பல்லவ மன்னன் காலத்தில் அமைக்கப்பட்டது.

இதன் காலம் 8-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேலூர் மாவட்டம் பாலாறு அணைக்கட்டில் இருந்து கூன்மடை என்ற இடத்தில் 2 கால்வாய்கள் பிரிகின்றன. அதில் ஒன்றான கோவிந்தவாடி கால்வாயில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டம் தைப்பாகம் என்ற இடத்தில் பிரிவதுதான் கம்பக் கால்வாய்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இக்கால்வாய் 44 கி.மீ. தூரம் பாய்கிறது. 85 ஏரிகள் வழியாக பாய்ந்து கடைசியாக ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கு செல்கிறது. அங்கிருந்து வெளியேறும் நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று, பின்னர் அடையாறு கால்வாயில் கலக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு கம்பக் கால்வாய் நேரடியாக செல்லாவிட்டாலும் ஸ்ரீபெரும்புதூர் ஏரி நீர் செல்வதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இதுவே முக்கிய நீராதாரமாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். கம்பக் கால்வாய் 85 ஏரிகள் வழியாக செல்வதால், காஞ்சிபுரம் வட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 7ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 22 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன்மூலம் பயன்பெறுகின்றன.

பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயனளிக்கும் கம்பக் கால்வாய் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என்று விவசாயிகள் ஏற்கெனவே புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் வந்தால், இக்கால்வாயின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு, நீராதாரம் பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: பரந்தூர் புதிய விமான நிலைய குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆர்.எல்.இளங்கோ: கம்பக்கால்வாய் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 85 ஏரிகளுக்கு நீரை கொண்டு செல்கிறது. இந்த கால்வாய் மீதுதான் பரந்தூர் விமான நிலையம் அமைய உள்ளது. கால்வாயை அழித்து விமான நிலையம் அமைக்கப்பட்டால், பல ஏரிகளுக்கு நீர் செல்வது பாதிக்கப்படும்.

இதுபோல பல நூறு ஏக்கர் விவசாயத்தை அழித்து புதிய விமான நிலையம் தேவையா என்பதை அரசு சிந்திக்க வேண்டும். பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதன்: கம்பக் கால்வாய் மீது விமான நிலையம் அமைக்கப்பட்டால், விமான நிலையத்தின் கழிவுகள் அனைத்தும் இந்த கால்வாயில்தான் செல்லும். இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். மழை, வெள்ளத்தின் போது, கம்பக் கால்வாயில் இருந்து விமான நிலையத்துக்குள் வெள்ளநீர் புகுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து நீர்வளத் துறை முக்கிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கம்பக் கால்வாயின் மேல் விமான நிலையம் வருவது உண்மை.விமான நிலையம் அமைய உள்ள இடத்தில் கால்வாய் 5 கி.மீ தூரம் செல்கிறது. ஆனால், கால்வாய் துண்டிக்கப்பட்டு மூடப்படாது. ஊருக்கு வெளியே பை பாஸ் சாலை செல்வது போல, நீரியல் வல்லுநர்கள் உதவியுடன் இந்த 5 கி.மீ தூரத்துக்கு விமான நிலையத்துக்கு வெளிப் பகுதியில் புதிய கால்வாய் வெட்டி இணைப்பு ஏற்படுத்தப்படும்.

எந்த பாதிப்பும் இல்லாமல் கால்வாயை பாதுகாப்பாக கொண்டு செல்ல ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்ட நீரியல் வல்லுநர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x