Last Updated : 17 Feb, 2021 03:12 AM

 

Published : 17 Feb 2021 03:12 AM
Last Updated : 17 Feb 2021 03:12 AM

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம்... புதுவை அரசியலில் புதுக் குழப்பம்

புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 3 நியமன எம்எல்ஏக்கள் இடங்களும் உள்ளன. வழக்கமாக ஆளும்கட்சியே நியமன எம்எல்ஏக்களை நியமிக்கும். 2016-ல் ஆட்சியில், அந்த நியமனத்தில் ஆன தாமதத்தை பாஜக பயன்படுத்திக் கொண்டது.

மத்திய உள்துறை அனுமதியோடு, பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதியை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தார். இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்துக்கும் சென்று, ‘மத்திய உள்துறையின் நியமனம் சரி’ என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

‘தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களைப் போலவே இவர்களுக்கும் பேரவையில் வாக்குரிமை உண்டு’ என்பதால் புதுவையில் இவர்களுக்கான மவுசு கூடியிருக்கிறது. கடந்த வாரம் புதுவைக்கு வந்த தலைமைத் தேர்தல் ஆணையரும், இதை உறுதிப்படுத்தி சென்றிருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் இரு எம்எல்ஏக்கள் பதவியைத் துறந்தனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களில் மல்லாடி, ஜான்குமார் என மேலும் இரு எம்எல்ஏக்கள் பதவியை துறந்துள்ளனர்.

இதனால் வாக்குரிமை உள்ள இந்த நியமன எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சிகளின் பலத்தை கூட்டியிருக்கின்றனர். இதனாலேயே, புதுச்சேரியில் உள்ள 3 நியமன எம்எல்ஏக்களும் ‘ஸ்டார் வேல்யூ’ பெற்று வலம் வரும் வருகின்றனர்.

இந்தச் சூழலில், தேர்தலுக்கு முன்பே நியமனம் மூலம் 3 எம்எல்ஏக்களை உறுதி செய்தே, களத்தில் பாஜக இறங்குகிறது. மத்தியில் பாஜக அரசு இருப்பதால் நிச்சயமாக3 நியமன எம்எல்ஏக்களை நியமித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் புதுச்சேரி பாஜக உள்ளது. கூட்டணி உடன்பாடு பேச்சுவார்த்தையில், கூட்டணிக் கட்சியினருக்கு நியமன எம்எல்ஏ பதவி தருவதாக உறுதியளித்து வருகிறது. ‘தேர்தலில் வெல்லாவிட்டாலும் நிச்சயம் நியமன எம்எல்ஏ பதவியுண்டு’ என்ற நம்பிக்கையை கூட்டணிக் கட்சியினரிடையே பாஜகவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

"இந்த நியமன எம்எல்ஏக்கள் பிரச்சினை தலை தூக்காத வரையில், புதுச்சேரியில் உள்ள 30 எம்எல்ஏக்களில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்கள் இருந்தால் போதும். இதனால், இதுவரை காங்கிரஸ் இந்த நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தை ஒரு பொருட்டாக கருதியதில்லை. காங்கிரஸ் கூட்டணி கூடுதல் இடங்களை வெல்ல வேண்டிய சூழல் இம்முறை உருவாகியுள்ளது. மத்திய அரசால் 3 நியமன எம்எல்ஏக்களை தங்கள் வசம் பெறும் பாஜக கூட்டணிக்கோ காங்கிரஸை விட குறைவாக வென்றாலே போதும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக முறைப்படி இது முற்றிலும் தவறானது" என்று காங்கிரஸ் தரப்பில் தங்கள் ஆதக்கத்தை தெரிவிக்கின்றனர்.

"இம்முறை தொடர்ந்தால் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களே பேரவைக்கு வந்து விட முடியும். உதாரணமாக, கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய சாமிநாதனே நியமன எம்எல்ஏவாக உள்ளே வந்து விட்டார். இந்த நிலை தொடர்ந்தால் குறுக்கு வழியில் சட்டப்பேரவைக்குள் வந்து அமர்வார்கள். அதனால், நியமன எம்எல்ஏக்களே புதுச்சேரிக்கு வேண்டாம் " என்கிறார் புதுச்சேரி திமுகவின் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா. அரசியலில் பல குழப்பம்; புதுச்சேரி அரசியலில் இது புதுக் குழப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x