Published : 08 Apr 2019 10:00 PM
Last Updated : 08 Apr 2019 10:00 PM

கள நிலவரம்: தென்காசி தொகுதி யாருக்கு?

தென்காசி (தனி) மக்களவைத் தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர் (தனி), சங்கரன்கோவில் (தனி) ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.

ஆண் வாக்காளர்கள் 7,32,490 பேர், பெண் வாக்காளர்கள் 7,56,376 பேர், இதர வாக்காளர்கள் 78 பேர் என 14,88,944 வாக்காளர்கள் உள்ளனர். பீடி தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகமாக உள்ளனர்.

தென்காசி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிமுகவின்  இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார், அமமுக வேட்பாளர் சு.பொன்னுத்தாய் ஆகியோருக்கு இடையேதான் கடும் போட்டி உள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதிவாணன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் முனீஸ்வரன் ஆகியோரும் கணிசமான வாக்குகளைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக சின்னத்தில் போட்டியிடுவதே தோல்வி பயம்தான் என்று திமுக, அமமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கூட்டணி பலம் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சாதகமாக இருந்தாலும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அனுசரித்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

திமுக வேட்பாளருக்கும் கூட்டணி பலம் அதிகமாக உள்ளது. அமமுக வேட்பாளரும் வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகிறார். தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் வெற்றி பெறுவார் என்று வாக்காளர்கள் கணிக்கின்றனர். கடைசி நேரத்தில் பண பட்டுவாடா தேர்தல் முடிவை எப்படி வேண்டுமானாலும் மாற்றக்கூடம் என்று கூறப்படுகிறது.

தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.தனுஷ் குமாருக்கும் அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய்க்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதில் யார் முதலிடம் பெறுவார் என்பதில் இழுபறி நீடிக்கிறது. கருத்துக் கணிப்புபடி, முதலிடத்தில் தனுஷ் எம்.குமார் உள்ளார். அமமுக பொன்னுத்தாய்க்கும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கும் இடையே சில வாக்குகளே வித்தியாசம் உள்ளன.

 

முக்கிய குறிப்பு: 

இது தொகுதிவாரியான வாக்காளர்கள் அளித்துள்ள வாக்கு விகிதம் அல்ல. கட்சி அல்லது வேட்பாளர் மீது அபிமானம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளலாம் என்பதால்,  குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவான/எதிப்பான இணையதள வாசகர்களின் மனநிலையையே இந்த வாக்களிப்பு காட்டுகிறது. அதை மனதில் கொண்டு இந்த முடிவுகளை அணுகும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

மற்ற தொகுதிகள் குறித்த விவரங்கள காண:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x