Published : 19 Mar 2019 10:27 AM
Last Updated : 19 Mar 2019 10:27 AM

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன்?- திருமாவளவன் விளக்கம்

விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், சிதம்பரம் தொகுதியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது ஏன் என விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (செவ்வாய்க்கிழமை) தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:

"தனிச்சின்னத்தில் போட்டியிடுவதற்காக பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தும், இந்நாள் வரை ஆணையம் சின்னத்தை ஒதுக்கவில்லை. முதலில் மோதிரம் சின்னம் கேட்டோம், அது வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். பின்னர், வைரம் சின்னத்தை தெரிவித்தோம். அது கிடைக்கும் என உறுதியளித்தார்கள். ஆனால், 2 நாட்கள் கழித்து அதுவும் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். மூன்றாவதாக பலாப்பழ சின்னம் கேட்டோம். அதுவும் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என்றார்கள். நான்காவதாக டேபிள் சின்னத்தை கேட்டிருக்கிறோம். 4-5 நாட்கள் ஆகி விட்டன. இன்னும் அச்சின்னத்தை ஒதுக்கவில்லை. இப்போது வேறொரு பட்டியலை அனுப்புங்கள் என்கின்றனர்.

இந்த நிமிடம் வரை சின்னம் ஒதுக்கப்படாததற்கு ஏதேனும் அரசியல் கட்சிகளின் தலையீடு இருக்குமா என்ற ஐயம் உள்ளது. இருந்தாலும் அதனை முடிவாக சொல்ல இயலாது. ஒவ்வொரு முறையும் நான் போட்டியிடும் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் டெபாசிட் இழக்கக் கூடிய சூழ்நிலை உள்ளது. அதனால், இரு தொகுதிகளிலும், தனிச்சின்னத்தில் போட்டியிடுவது நல்லதல்ல.

இனி காத்திருக்க முடியாது. குறைந்த நாட்களே உள்ளதால், தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வது சிரமமானது. 6 சட்டப்பேரவைகளை உள்ளடக்கிய பரந்த நாடாளுமன்றத் தொகுதி விழுப்புரம். சிதம்பரம் தொகுதியைப் போன்று விழுப்புரம் தொகுதியில் கட்சிக்கு வாக்கு வங்கி திரட்சி என்பது உறுதிப்படுத்தப்படாதது.

விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் கள நிலவரம் வெவ்வேறானவை. விழுப்புரத்தில் வீம்புக்கு தனிச்சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைய விருப்பமில்லை. இன்னும் பெருவாரியான மக்களின் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் அணிதிரட்டல் அத்தொகுதியில் இல்லை என புரிந்துகொள்ள வேண்டும்.

ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட விரும்பியதாகவோ, திமுக அழுத்தம் காரணம் எனவோ எண்ண வேண்டாம்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x