Last Updated : 16 Mar, 2019 12:28 PM

 

Published : 16 Mar 2019 12:28 PM
Last Updated : 16 Mar 2019 12:28 PM

நெல்லையில் மீண்டும் களம் காணும் திமுக: வாய்ப்பை வசப்படுத்த முட்டி மோதும் முக்கிய பிரமுகர்கள்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இம்முறை திமுக மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளராக களத்தில் நிற்க கடந்த சில மாதங்களாக காய் நகர்த்தி வந்த திமுக பிரமுகர்கள் தங்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் கடந்த 1951-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் சுதந்திரா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு முறையும், அதிமுக 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2014 தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட கே.ஆர்.பி.பிரபாகரன் 3,98,139 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சி.தேவதாசசுந்தரம் 2,72,040 வாக்குகளையும், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராமசுப்பு 62,863 வாக்குகளையும் பெற்றிருந்தனர். வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி மீண்டும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பிரமுகருக்கே வாய்ப்புஇங்கு பலமுறை வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு இத்தொகுதியை கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்திவந்தனர். நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற பிரச்சார பொதுக்கூட்டத்திலும் இதை வலியுறுத்தி காங்கிரஸார் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், திமுகவுக்கு திருநெல் வேலி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக் கட்சியினர் மத்தியில் இது வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் திமுக வேட்பாளராக தேவதாசசுந்தரம் போட்டியிட்டபோது, அவர், `வெளியூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்’ என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. திமுக முக்கியஸ்தர்கள் பலரின் உள்ளடி வேலைகளால் அவர் தோல்வியை சந்தித்ததாக திமுகவினர் மத்தியில் பரவலான பேச்சு இருந்தது. இதனால், இம்முறை திருநெல்வேலி தொகுதியில் திமுக போட்டியிட்டால் உள்ளூர் பிரமுகரே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என அக்கட்சியினர் மத்தியில் கருத்து நிலவியது.

தற்போது இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு அக்கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் விருப்ப மனு அளித்து, நேர்காணலையும் சந்தித்துள்ள நிலையில் வேட்பாளர் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அவர்களில் மாநில திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவருமான கிரகாம் பெல், தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டல லே செயலாளர் எஸ்டிகே.ராஜன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஞானதிரவியத்தின் மகன் வழக்கறிஞர் ஞா.சேவியர் செல்வ ராஜா, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஆரோக்கிய எட்வின் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, முன்னாள் எம்எல்ஏ அப்பாவு, தலைமை செயற்குழு உறுப்பினர் பெல்சி உள்ளிட்டோரும் வாய்ப்பு கேட்டுள்ளனர். பாரம்பரியமிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் களமிறங்கப் போகும் வேட்பாளர் யார்? என்பது நாளை தெரிந்து விடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x