Last Updated : 20 Mar, 2019 07:55 AM

 

Published : 20 Mar 2019 07:55 AM
Last Updated : 20 Mar 2019 07:55 AM

ராகுல் காந்தி நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்கள் கைது: பாஜக தலைவர் அமித் ஷா கண்டனம்

பெங்களூருவில் ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக முழக்கமிட்டவர்களை கைது செய்ததற்கு பாஜக தலைவர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள மான்யதா தொழில்நுட்பப் பூங்காவில் 50-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அங்கு வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகவல் தொழில்நுட்ப அதிபர்கள், தொழில்முனைவோர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் ஒரு சிலருக்கு மட்டுமே பேசவும், ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் மற்ற தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இவர்களுடன் பாஜகவினரும் சேர்ந்து ராகுல் காந்தி மான்யதா தொழில்நுட்ப பூங்காவில் நுழைகையில் பதாகை மூலமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, ராகுல் நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைந்த போது பாஜகவினரும் சில ஊழியர்களும், ‘‘திரும்பி போ ராகுல்.. மீண்டும் மோடியே வெல்வார்'' என முழங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். ராகுல் காந்தியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர்களை விடுவித்தனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர்கள், ‘‘மோடிக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்களை கைது செய்ததன் மூலம் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியின் சர்வதிகார முகம் வெளிப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது'' என விமர்சித்துள்ளனர்.

இதே போல அக்கட்சியின் தலைவர்அமித் ஷா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு தங்களுக்கு எதிரானவர்களை ஒடுக்குகிறது. கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நாயகர்கள் எங்கே போனார்கள்?எதிர்காலத்துக்கு வழிகாட்டும் இளைஞர்களை மிரட்டுவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x