Last Updated : 15 Mar, 2019 09:20 AM

 

Published : 15 Mar 2019 09:20 AM
Last Updated : 15 Mar 2019 09:20 AM

வலைதளங்களில் பதிவாகும் நடத்தை விதிமீறல், புகார்கள்: மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவால்

சமூக வலைதளங்களில் மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிமீறல்களும், அதன் மீதானப் புகார்களும் குவியத் துவங்கி விட்டன. இதன் மீது நடவடிக்கை எடுப்பது, மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பெரும் சவாலாகி வருகிறது.

தற்போது அதிக புழக்கத்தில் உள்ளஆன்ட்ராய்ட் செல்போன்களால் சமூகவலைதளங்களின் பயன்பாடு பொதுமக்களிடம் பெருகி வருகிறது. அவர்களது பெரும்பாலான நடவடிக்கைகள் சமூக வலைதளங்களிலும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மத்திய தேர்தல் ஆணையம் இந்தமுறை மக்களவை தேர்தலில் சமூக வலைதளங்கள் மீதும் தனது கண்காணிப்பை தொடங்கி உள்ளது.

இதற்கென தனியாக, ‘சிவிஜில்’ எனும் பெயரில் ஒரு செல்போன் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. தேசிய அளவிலான இந்த செயலி, மாநில எல்லைகளுக்கு உட்பட்டே செயல்படும். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு மற்ற மாநிலங்கள் மீதானப் புகார்களை இதன்மூலம் அளிக்க முடியாது. இதன் மீதான விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே இன்னும் ஏற்படாததால் பலரும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் புகார்களை பதிவிடத் துவங்கி உள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, ‘தமது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை எனவும், அரசியல் கட்சிகள் இந்திய ராணுவத்தையும் அதன் படங்களையும் பிரச்சாரங்களில் பயன்படுத்துவதாகவும் புகார்கள் குவிகின்றன. பல புகார்களில் அந்த சமூக வலைதளக் கணக்குகள் போலியானவையாகவே இருப்பது ஆணையத்துக்கு பெரும் சவாலாக உள்ளது. இவற்றை சமாளித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதன்முறையாக ஆணையம், சமூக வலைதளங்களுக்கான மூன்று அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக்குழுவை அமைத்துள்ளது’ எனத் தெரிவித்தன.

கண்காணிப்புக் குழுவினரின் உத்தரவின் பேரில் ஆணையத்துக்கு சமூக வலைதளங்கள் மூலம் வரும் புகார்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் நிகழும் தேர்தல் விதி மீறல்களையும் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

இதற்காக, சில வெளிநாட்டு கண்காணிப்பு செயலிகளை ஆணையம் வாங்க திட்டமிட்டுள்ளது. இதனால், மக்களவை தேர்தலின் சில முக்கிய விஷயங்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளன. எனினும், இந்திய கண்காணிப்பு செயலிகளைப் பெறுவதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் காரணமாகவும், அதற்காக ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கமாக தேர்தல் நடத்தை விதி மீறுபவர்களை தண்டிக்க ஆணையத்தின் சட்டத்தில் இடமில்லை எனக் கருதப்படுகிறது. இதனால், தேர்தல் நடத்தை விதி மீறல்களை அரசியல் கட்சிகள்தான் தார்மீகப் பொறுப்பில் அவற்றை முடிந்தவரை பின்பற்றி வருகின்றன. எனவேதான் ஆணையத்தால் பிடிக்கப்படும் ரொக்கம், மது, போதைப் பொருட்கள் ஆகியவை மீது பதிவான வழக்குகள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விடுகின்றன. இவர்களால் அவ்வழக்குகள் முறையாக விசாரிக்கப்படாமல் பெரும்பாலான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் புகார் உள்ளது.

இதைத் தடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர தொடர்ந்து வற்புறுத்தியும் பலன் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் நடைபெறும் விதிமீறல்கள் மீது ஆணையம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அந்த வழக்குகளை வழக்கம்போல் விசாரிக்கும் போலீஸாரின் நடவடிக்கைகளை பொறுத்தே தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். இதனால், சமூக வலைதளங்களில் வீதிகளை மீறுபவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x