Published : 25 Mar 2019 08:07 PM
Last Updated : 25 Mar 2019 08:07 PM

எச்.ராஜாவுக்கு ஆதரவா?- மு.க.அழகிரி தரப்பில் விளக்கம்

மு.க.அழகிரிக்கு எச்.ராஜா பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றதுபோல் உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு அழகிரி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்தவர். தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்தவர். மதுரையை பிரதானமாக கொண்டு திமுக அரசியலை இயக்கியவர்.

ஒரு கட்டத்தில் மு.க.ஸ்டாலினா? அழகிரியா? என்கிற போட்டி கட்சிக்குள் கடுமையாக இருந்தது. இடையில் திமுக தலைவர் கருணாநிதியிடம் இதுகுறித்த வாக்குவாதம் காரணமாக ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் அவர் திமுகவை விமர்சித்ததாக கூறி 2014-ம் ஆண்டு  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து எதிர்க்கட்சியினருடன் சேர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்பட்டதாகத் தெரிவித்து பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கருணாநிதி மறைவுக்குப் பின் திமுகவில் தன்னை திமுகவில் இணைப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர் அவர் ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.அதிமுக, பாஜக ஓரணியாக நிற்கின்றன.

சிவகங்கை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எச்.ராஜா மு.க.அழகிரியைச் சந்திப்பதுபோன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. திமுக மீதுள்ள கோபத்தில் எச்.ராஜாவை அழகிரி ஆதரிக்கிறாரா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.

இதுகுறித்து அழகிரி தரப்பில், ''எச்.ராஜாவுடன் அழகிரி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைக் கொண்டு பாஜகவுக்கு அவர் ஆதரவு அளிப்பதாக பொய்யான பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அது தவறு. யாரும் அவரைச் சந்திக்கவில்லை. அவர் ஆதரவும் தரவில்லை'' என விளக்கம் தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x