Published : 09 Mar 2019 02:57 PM
Last Updated : 09 Mar 2019 02:57 PM

ராமநாதபுரத்தில் களமிறங்க விரும்பும் பாஜக: ‘கலக்கத்தில்’ அன்வர் ராஜா எம்.பி.

இந்துக்களின் புனித தலமான ராமேசுவரம் இடம் பெற்றிருக்கும் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜக விரும்புவதால் இத்தொகுதியின் சிட்டிங் எம்.பியான அன்வர் ராஜா கலக்கத்தில் உள்ளார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக, அதிமுக உடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது போல அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கும் 10 இடங்களை ஒதுக்க வேண்டும் என பாஜக மேலிடம் விரும்பியது. ஆனால் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. குறைவான எண்ணிக்கையில் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், கேட்கும் தொகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என தமிழக பாஜக தலைமை வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜகவுக்கு ஒதுக்கப் பட்டுள்ள 5 இடங்களுக்கான உத்தேச தொகுதிகள் குறித்த தகவல்கள் வெளி யாகி உள்ளன. தென் சென்னை, கோயம் புத்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் சிவகங்கை ஆகிய தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப் படுகிறது. முன்னதாக மார்ச் 1-ம் தேதி அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 250 கோடி மதிப்பில் புதிய பாம்பன் பாலம், ரூ. 205 கோடி மதிப்பில் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு ரயில்வே பாதை ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டினார். மேலும் இந்துக்களின் புனித தலமான ராமேசுவரம் இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என பாஜகவின் டெல்லி மேலிட தலைவர்கள் விரும்புகின்றனர். இதனால் ராமநாதபுரம் மக்களவை தொகுதியைக் கேட்டு தமிழக பாஜக அதிமுக தலைமையிடம் அடம் பிடித்து வருகிறது.

ராமநாதபுரத்தை சொந்த ஊராக கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் குப்புராம், புதுக்கோட்டையை சேர்ந்த கருப்பு முருகானந்தம் ஆகிய இருவரும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் தரப்பு, ஈபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என அதிமுகவினரின் கோஷ்டி மோதல் உச்சத்தில் உள்ளதால் இதனை சமாளிக்க ராமநாதபுரத்தை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்து விடலாமா என்றும் அதிமுக மேலிடமும் யோசித்து வருகிறது.

பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவரும், தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி கூடாது என்று சொல்லி வந்தவர்களில் ஒருவருமான அன்வர் ராஜா ஒரு கட்டத்தில் அதிமுக-பாஜ கூட்டணி உறுதியானதும் நொந்து போய் விட்டார். இன்னும் ஒருபடி மேலே போய் பாஜகவுக்கு ராமநாதபுரம் தொகுதியையும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றதும் கலக்கம் அடைந்துள்ளார். தொடர்ந்து பொதுக் கூட்டங்களிலும், செய்தியாளர் சந்திப்புகளின்போதும் அன்வர் ராஜா பாஜவுடனான கூட்டணி கொள்கைக்காக அல்ல, ஆட்சியை காப்பாற்றவே கூட்டணி என கருத்து தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x