Last Updated : 10 Mar, 2019 07:50 AM

 

Published : 10 Mar 2019 07:50 AM
Last Updated : 10 Mar 2019 07:50 AM

தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது யார்?- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது யார் என்பதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு சொல்வாரா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலம் ஹாவேரியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் - மஜத கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவடையாததால் வேட்பாளர்களும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் வேட்பாளரின் பெயரை குறிப்பிடாமல் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளாக வெறும் அறிவிப்புகளை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். கருப்பு பண மீட்பு, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம், வேலை வாய்ப்பு, விவசாய கடன் தள்ளுபடி என அவர் அறிவித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆனால் பெரும் பணக்காரர்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். பண மதிப்பு நீக்கத்தால் நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் என அனைவரும் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்துள்ள அனில் அம்பானி, அதானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி என யாரும் வரிசையில் நிற்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனமான ஹெச். ஏ.எல். உடன் ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ரூ.30 ஆயிரம் கோடி வாங்கிக் கொண்டு அனில் அம்பானியிடம் ரஃபேல் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் மோடியை விசாரிக்க திட்டமிட்டிருந்த சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மாற்றி விட்டார். அனில் அம்பானி, அதானி, விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோருக்கு மோடி வாட்ச்மேன் ஆக இருக்கிறார்.

பாகிஸ்தான் மீதான தாக்குதலை பாஜக அரசியலாக்கி வருவது எடியூரப்பாவின் பேச்சு மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதில் ராணுவத்தினர்தான் உயிரைக்கொடுத்து போராடினார்கள். ஆனால் பாஜகவினர் அதனை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக்கொள்வது கண்டிக்கத்தக்கது.

கந்தகார் விமானக் கடத்தலின்போது பாஜக தலைமையிலான அப்போதைய அரசு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை விடுவித்தது. அவரை விடுவிக்காமல் இருந்திருந்தால் புல்வாமா தாக்குதலே நடந்திருக்காது.

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது யார் என்பதை நாட்டு மக்களுக்கு மோடி சொல்வாரா? புல்வாமா தாக்குதலை வைத்து கர்நாடகாவில் 22 இடங்களில் பாஜக வெல்லும் என எடியூரப்பா கணக்குப் போடுகிறார். 22 அல்ல, 2 இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x