Last Updated : 30 Mar, 2019 11:04 AM

 

Published : 30 Mar 2019 11:04 AM
Last Updated : 30 Mar 2019 11:04 AM

காங்கிரஸ் குடும்பத்திலிருந்து ஒரு சுயேட்சை வேட்பாளர்: டெல்லி மேலிடத்துக்கு ஆதங்கத்தைச் சொல்லவே போட்டி; தீபன் அருணாச்சலம் குமுறல்

தென்காசி தனித்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 6 முறை எம்.பி.யாக இருந்த அருணாச்சலத்தின் 2-வது மகன் தீபன் அருணாச்சலம் சுயேட்சை வேட்பாளராக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் வந்தவர் ஏன் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டும் என்ற கேள்விகளோடுதீபன் அருணாச்சலத்தை 'இந்து தமிழ் திசை'க்காக அணுகினோம்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அருணாச்சலத்தை தமிழக காங்கிரஸ் மறந்திருந்தாலும் தென்காசி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று பேச்சைத் தொடங்கினார்.

உங்கள் தந்தை தமிழக காங்கிரஸின் நட்சத்திரமாக இருந்தவர்? நீங்கள் ஏன் சுயேட்சையாக போட்டியிடுகிறார்கள்?

ஆமாம், என் தந்தை தென்காசி தொகுதியில் ஒரு நட்சத்திரமாகவே இருந்தார். இந்தத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. 1957-ம் ஆண்டு முதல் 1995 வரை காங்கிரஸ் கட்சியே இத்தொகுதியில் வெற்றி பெற்றது. 1977, 1980, 1984, 1989, 1991 என தொடர்ந்து 5 முறை எனது தந்தை காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றார். இத்தொகுதியில் 6 முறை எம்.பி. 1998-ல் அதிமுக வெற்றி பெற்றது. அந்த முறைதான் எனது தந்தை தொகுதியில் முதன் முதலாக தோல்வியைத் தழுவினார். ஆனால் அடுத்தடுத்து இரண்டு தேர்தலில் காங்கிரஸுக்கு தென்காசி மறுக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. கடந்த முறை (2014) காங்கிரஸுக்கு சீட் வழங்கப்பட்டாலும் கூட சரியான வேட்பாளரைக் களமிறக்கவில்லை. இதனால் தொகுதி மீண்டும் கைநழுவிப் போனது. இந்த முறையும் காங்கிரஸுக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படவில்லை. இப்படியே சென்றால் தொகுதியில் காங்கிரஸின் பலம் குறைந்துவிடும்.

ஒரு தேசியக் கட்சி தான் கேட்டுப்பெறும் தொகுதிகளிலேயே கோட்டைவிட்டால் எப்படி? இத்தொகுதியில் எனது தந்தைக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது. ஒருவேளை காங்கிரஸ் கட்சி தென்காசியைப் போராடி பெற்றிருந்தால் நாங்கள் காங்கிரஸுக்காக களப்பணி ஆற்றியிருப்போம்.

உங்கள் சகோதரர் மோகன் அருணாச்சலம் இப்போதும் காங்கிரஸில் இருக்கிறார். அவருக்கு இந்த விஷயம் தெரியுமா?

தெரியும். அவர் அதிருப்தியில் இருக்கிறார். ஆனால், கட்சியில் சிலர் என்னைப் பாராட்டினார்கள். அவர்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவர்களும் என்னைப் போலவே அதிருப்தியில் உள்ளனர். தென்காசியை காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டும் என்கின்றனர்.

தென்காசி கை நழுவிப் போன அதிருப்தி மட்டுமேதான் சுயேட்சையாகப் போட்டியிடக் காரணமா?

அதிருப்தியும் ஒரு காரணம். தமிழக காங்கிரஸின் அணுகுமுறை ஏமாற்றம் அளிக்கிறது. இங்குள்ள கோஷ்டி பூசல்களால்தான் தொகுதியைப் பெறுவதிலும் தொகுதிகளிலும் வலுவான வேட்பாளர்களையும் நிறுத்துவதில் சிக்கல் இருக்கிறது. நான் படித்தது எல்லாம் டெல்லியில்தான். நானொரு பட்டதாரி. மத்திய கிழக்கு நாடுகளில் விமானியாகவும் இருந்தேன். ஆங்கிலம், இந்தி என மொழி ஆளுமை இருக்கிறது. அப்பாவிடம் கற்றுக் கொண்ட அரசியல் அனுபவம் இருக்கிறது.

என்னைப் போன்ற இளைஞர்களை ஆதரிக்க தமிழக காங்கிரஸ் தவறுவது ஏன்? தென்காசியில் என் அப்பா மறைவுக்குப் பின்னும் அவருக்கு இருக்கும் செல்வாக்குக்கும் தென்காசி மக்கள் படித்த இளைஞருக்கான தேடலில் இருக்கும் சூழலையும் தமிழக காங்கிரஸ் சாதுர்யமாகப் பயன்படுத்தி தொகுதியைக் கைப்பற்றி என்னைப் போன்றோரை களம் இறக்கியிருந்தால் தென்காசி காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும். இந்த ஆதங்கம் டெல்லி மேலிடத்துக்குத் தெரிய வர வேண்டும். அதற்காகவே இந்தப் போட்டி.

டெல்லியில் இருந்தாகச் சொல்கிறீர்கள். இந்தி தெரியும், ராகுலும் உங்களைப் போன்றதொரு இளைஞரே. அவரை நேரடியாகச் சந்திக்க முயலவில்லை?

இல்லை. ராகுலைச் சந்திக்க முடியாது என்பதால் அல்ல. அவர் தினமும் பலரைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார். நானும் எனது தந்தை பெயரைச் சொல்லி அவரைச் சந்தித்துவிடலாம். ஆனால், என்னைப் பற்றி நானே எப்படி அவரிடம் சொல்ல முடியும். என் தந்தையால் பயனடைந்த தமிழக காங்கிரஸ் அல்லவா டெல்லியில் என்னை அடையாளம் காட்ட வேண்டும். அவர்கள் என் தந்தையை மறந்துவிட்டார்கள். தொகுதியையும் மறந்துவிட்டார்கள்.

உங்கள் தந்தையைப் பற்றி நிறைய பேசுகிறீர்கள். வாரிசு என்பதால்தான் இந்த அரசியல் ஆசையும் ஆவேசமுமா?

இந்தக் கேள்வியை உங்களிடமிருந்து இவ்வளவு நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வாரிசு அரசியல் என்பது தந்தை மறைந்தவுடன் எந்த முன்னனுபவம் இல்லாமலேயே கட்சியில் பதவிக்கும் பொறுப்புக்கும் தேர்தலில் போட்டிக்கும் வருவது. என் தந்தை இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. காங்கிரஸ் தொகுதியையும் எங்கள் குடும்பத்தையும் அங்கீகரிக்கும் எனக் காத்திருந்து காத்திருந்து நொந்து போய் அரசியலைக் கையில் எடுத்திருக்கிறேன். நிச்சயமாக எனது தந்தையின் அடையாளத்தைச் செல்லுமிடமெல்லாம் சொல்வேன். ஆனால் எனது அரசியல் வாரிசு அரசியல் இல்லை.

இந்தத் தேர்தலில் நீங்கள் சுயேட்சையாக களமிறங்கியதை அறிந்து, உங்கள் ஆதங்கங்களையெல்லாம் புரிந்து கொண்டு காங்கிரஸ் மேலிடம் உங்களை அழைத்து கட்சியில் இணையச் சொன்னால் என்ன நிலைப்பாடு எடுப்பீர்கள்?

அது, அழைப்பு எங்கிருந்து வருகிறது என்பதைப் பொறுத்தது. இங்கே தமிழக காங்கிரஸுக்குள் பூசல் இருக்கிறது. ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் இன்னொருவர் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். டெல்லியிலிருந்து அழைப்பு என்றால் அதைப் பற்றி யோசிக்கலாம்.

தென்காசியில் தற்போது திமுக வேட்பாளருக்காக காங்கிரஸ் கட்சியினர் களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் வேளையில், காங்., பாரம்பரியம் கொண்ட நீங்கள் சுயேட்சையாக நிற்பதால் பாதிப்பு ஏற்படாதா?

என் நோக்கம் கவன ஈர்ப்பு. நான் வாக்கு கேட்டு செல்லுமிடமெல்லாம் என் தந்தையைப் பற்றி காங்கிரஸுக்கு தென்காசி கிடைக்காதது பற்றி மக்களும் ஆதங்கப்படுகிறார்கள். எனது தந்தையில் அடையாளத்துடன் நான் தேசியக் கட்சியான காங்கிரஸின் வேட்பாளராக நின்றிருந்தால் எனக்கு வாக்குகள் கிடைத்திருக்கும். இப்போது சுயேட்சையாக என்னால் வாக்கு ரீதியாகப் பாதிப்பு ஏற்படாது என்பதை புரிந்து கொள்ளும் அரசியல் அறிவு எனக்கு இருக்கிறது.

உங்களுக்குக் கிடைத்துள்ள சின்னம் பற்றி..

ஆம், தெரியும். அது விசிக தலைவர் திருமாவளவனின் வெற்றிச் சின்னமாக இருந்தது. அந்தச் சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. ஆனால், இந்தத் தேர்தலில் எனக்கு வெற்றி கிடைக்காது என்ற நிதர்சனத்தைத் தெரிந்தே தான் இறங்கியிருக்கிறேன். காங்கிரஸின் கவனத்தை ஈர்ப்பேன் என நம்புகிறேன்.

ஒருவேளை டெல்லி மேலிடம் உங்களிடம் தமிழக காங்கிரஸைப் பற்றிக் கேட்டால்.. ஓரிரு வரிகளில் எப்படிச் சொல்வீர்கள்?

தமிழக காங்கிரஸில் வலுவான தலைவர் இல்லை என்பேன். ஜி.கே.மூப்பனாருக்குப் பின்னரே கட்சியில் வலுவான தலைமை இல்லாமல் போய்விட்டது. மூப்பனார் கிங் மேக்கராக இருந்தார். இப்போது, அதிமுகவில் ஜெயலலிதா இல்லை. திமுகவில் கருணாநிதி இல்லை. இத்தகைய சூழலில் தமிழக காங்கிரஸ் தனியாக நின்று மக்களை ஈர்த்திருக்க வேண்டாமா? இன்று பாஜககூட தமிழகத்தில் தாமரை மலரும் என்று மார்தட்டிக் கொண்டிருக்க தமிழக மக்களிடம் கட்சியை தனியாக கொண்டு சேர்க்க முடியாத சூழல் வலுவான தலைமை இல்லாததாலும், கோஷ்டி பூசலாலுமே நிகழ்கிறது. அதை டெல்லி மேலிடம் முதலில் சரி செய்ய வேண்டும் என்பேன்.

இவ்வாறு தீபன் கூறினார்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x