Published : 22 Feb 2019 10:56 AM
Last Updated : 22 Feb 2019 10:56 AM

திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் முயற்சி: விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகதகவல் வெளியான நிலையில், விஜயகாந்தை தமிழக காங்கிரஸ்முன்னாள் தலைவர் சு.திருநாவுக் கரசர் சந்தித்துப் பேசினார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக தலை மையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவற்றுடன் அதிமுக, பாஜக தலைவர்கள் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. இந்த அணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையிலான குழு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க திமுக மட்டுமல்லாது, காங்கிரஸும் முயற்சி மேற் கொண்டு வந்தது. ஆனால், கடைசிநேரத்தில் அதிமுக - பாஜக கூட்ட ணியில் பாமக இணைந்தது. இதனால் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளது. திமுக தலைமை பாமகவை தவற விட்டுவிட்டதாக காங்கிரஸ் கருதுகிறது. எனவே, தேமுதிகவை கூட்டணியில் கொண்டு வருவதற்கான முயற்சி யில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளது. கடந்த 19-ம் தேதி விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இதை தெரிவித்துள்ளார். ஆனால், அக்கட்சி 9 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது. ஆனாலும் விஜயகாந்த் குடும்பத்தினருடன் அமைச்சர் பி.தங்கமணியும், பாஜக தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று பகல் 12 மணி அளவில் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சுமார் 30 நிமிடங்கள் நடந்தசந்திப்புக்குப் பிறகு செய்தியாளர் களிடம் பேசிய திருநாவுக்கரசர், ''நானும் விஜயகாந்தும் 35 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். அந்த அடிப்படையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ள அவரைச் சந்தித்து நலம் விசாரித்தேன். விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகியோருடன் பேசினேன். நானும் அரசியல்வாதி. விஜய காந்தும் அரசியல்வாதி. இது தேர்தல் நேரம். எனவே, அரசியல் நிலவரங்கள் குறித்தும் பேசினோம். நாட்டுநலன் கருதி நல்ல முடிவை எடுக்குமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்'' என்றார். அப்போது சுதீஷும் உடனிருந்தார்.

தேமுதிகவை இழுக்க அதிமுக, திமுக அணிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x