Published : 08 Apr 2014 05:39 PM
Last Updated : 08 Apr 2014 05:39 PM

எங்களுக்கு பிரதமர் பதவியைவிட மக்கள் நலனே முக்கியம்: ராணிபேட்டை, திருவள்ளூர் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு

பிரதமர் பதவி என்பதோ, அமைச்சர் பதவி என்பதோ முக்கியமல்ல என்றும், தமிழகத்திற்கான நன்மைகள்தான் முக்கியம் என்றும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா பேசினார்.

மேலும், இரவு 10 மணிக்கு பிறகான பிரச்சாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா பேசியது:

"நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தல் மக்கள் விரோத ஆட்சியை, முடிவுக்கு கொண்டு வரும் தேர்தல் மட்டுமல்ல, மக்களாட்சியை நிலைநாட்டும் தேர்தல். இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். இதனை உங்களால் தான் சாதிக்க முடியும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான், தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில் நீங்கள் எல்லாம் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவர்களை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நான் சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும். அதனை உங்கள் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வாக்கு என்பது உங்கள் உரிமை. உங்கள் வாக்கு என்பது இந்த நாட்டின் சொத்து. உங்கள் வாக்குதான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றி அமைக்கப் போகிறது. அத்தகைய சக்தி படைத்தது உங்கள் வாக்கு. எனவே, உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் களம் இறங்கி உள்ளன. அந்தக் கட்சியினரெல்லாம் உங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றனர். வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் அந்தக் கட்சிகளும் வெற்றிபெறப் போவதில்லை. வாக்குகள் சிதறிவிடும், அவ்வளவு தான். அதனால் உங்கள் வாக்கு வீணாகிவிடும். தயவுசெய்து உங்கள் வாக்கை வீணாக்கிவிடாதீர்கள். மாறாக, வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, அவர்களை மகத்தான வெற்றிபெறச் செய்தால், மத்தியிலே இந்தியாவை வல்லரசாக்கக் கூடிய வலிமையான ஆட்சி அமையும்.

அதிமுக அங்கம் வகிக்கும் மத்திய ஆட்சி அமைந்தால், இந்த நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் வந்து குவியும். 'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல ஒரு வாய்ப்பினை அதிமுகவுக்கு நீங்கள் நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

தேர்தல் ஆணையம் மீது சாடல்

தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என்பது வாக்காளப் பெருமக்களிடத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகத் தான். வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் இந்த மேடையில் வித்தியாசமான ஒன்றை கவனித்து இருப்பீர்கள். நான் தேர்தல் பிரச்சாரம் செய்கின்ற இந்த மேடையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரே இல்லை. இதற்கு என்ன காரணம்? இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான விதிமுறைகளும், ஆணைகளும், கட்டுப்பாடுகளும் தான் காரணம்.

கடந்த ஒரு மாத காலமாக நான் மேற்கொண்டுள்ள சூறாவளி தேர்தல் பிரச்சாரத்திற்கு மக்கள் அலை கடலென திரண்டு வருகிறார்கள். மக்கள் வெள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கண்டு எதிர்க்கட்சிகள் கலங்கிப் போய் இருக்கின்றன. குறிப்பாக தி.மு.க. மிரட்சி அடைந்துள்ளது. விரக்தி அடைந்துள்ளது. எனவே தான் தி.மு.க-வினர் தற்போது, அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா பிரதமர் ஆக முடியாது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். அதாவது, அதிமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை தி.மு.க-வினரே உணரத் தொடங்கிவிட்டனர்.

கோவை கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அதிமுகவுக்கு வாக்களித்தால் சாபம் இடுவதாக கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரையில் பிரதமர் பதவி என்பதோ, அமைச்சர் பதவி என்பதோ முக்கியமல்ல. தமிழ்நாட்டிற்கு என்னென்ன திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதும், தமிழகத்திற்கு என்ன நன்மைகள் செய்ய முடியும் என்பதும் தான் எங்களது சிந்தனை.

எனக்கு வரும் கூட்டத்தைக் கண்டு எதிர்க்கட்சிகள் மிரட்சி அடைவதிலோ, விரக்தி அடைவதிலோ ஆச்சரியப்படுவதற்கு ஏதமில்லை. ஆனால், இங்கு கூடுகிற கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்து இருப்பது தான் எனக்கு வியப்பாக உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நான் பிரச்சாரம் செய்யும் போது, அந்தத் தொகுதி வேட்பாளர் கலந்து கொள்ளக் கூடாது, மேடையில் இருக்கக் கூடாது, அவரது புகைப்படமும் இருக்கக் கூடாது, வேட்பாளரின் பெயரை கூட நான் உச்சரிக்ககூடாது, "இத்தொகுதியின் வேட்பாளர் இவர் தான்" என்று கூட நான் சொல்லக் கூடாது என்றெல்லாம் இதுவரையில் தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு விந்தையான ஆணைகளை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

அவ்வாறு மீறி வேட்பாளருடைய பெயரை நான் உச்சரித்தாலோ, அல்லது அவர் மேடையில் இருந்தாலோ அல்லது அவரது புகைப்படம் இருந்தாலோ, இந்தக் கூட்டத்திற்கான அனைத்து செலவையும் தேர்தல் ஆணையம் வேட்பாளர் கணக்கில் சேர்த்து விடுமாம். வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் உங்கள் சொந்த செலவில் வாகனங்களில் வந்து செல்லும் செலவும் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. இது என்ன நியாயம்?

அதிமுகவை கழகத்தைப் பொறுத்த வரையில், என்னைப் பொறுத்த வரையில், மேடை அமைப்பு, தோரணங்கள், பதாகைகள், கட்அவுட்டுகள், நாற்காலிகள் போன்ற செலவுகளை வேட்பாளர் கணக்கில் சேர்ப்பதற்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், கூட்டம் அதிகமாக கூடுகிறது என்பதைக் காரணம் காட்டி, பொதுமக்கள் தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்டு கூட்டத்திற்கு வரும் செலவைக் கூட வேட்பாளர் கணக்கில் சேர்ப்போம் என்று சொன்னால் அது எப்படி நியாயமாகும்?

ஒரு மக்களவைத் தொகுதி என்பது ஒரு மாவட்டத்திற்கு இணையானது. நான் ஒரு மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் செய்கிறேன், ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறேன் என்றால் என்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது உரையைக் கேட்க வேண்டும் என்ற விருப்பத்தில், அந்தத் தொகுதி முழுவதிலும் இருந்து பொதுமக்கள் தாங்களாகவே வாகனங்களை ஏற்பாடு செய்து கொண்டு அலை கடலென திரண்டு வருகிறார்கள்.

என்னைப் பார்க்க, எனது உரையைக் கேட்க வருகின்ற மக்கள் கூட்டத்தை நான் எப்படி கட்டுப்படுத்த முடியும்? இதை கழக நிர்வாகிகள் எப்படி கட்டுப்படுத்துவார்கள்? குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மக்கள் வர வேண்டும், அதற்கு மேல் வரக் கூடாது என்று நான் சொல்ல முடியுமா? எப்படி சொல்ல முடியும்? எப்படி தடுக்க முடியும்? இது எங்களால் இயலாத காரியம். மக்கள் ஆர்வத்திற்கு அணை போட முடியாது. இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களுக்கு எதிரான செயல். ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.

ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்தச் செலவில் வாகனங்களில் எனது கூட்டத்திற்கு வரும் செலவு வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், நான் பேசும் கூட்டத்தில் எனது கட்சியின் வேட்பாளர் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது வேட்பாளர் மேடையில் நிற்க முடியாத சூழ்நிலையை, கூட்டத்திற்கு வர முடியாத சூழ்நிலையை, வேட்பாளரின் புகைப்படத்தைக் கூட ஒட்ட முடியாத சூழ்நிலையை, வேட்பாளர் பெயரைக் கூட உச்சரிக்க முடியாத சூழ்நிலையை இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி விட்டது.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி முதலில் இரவு பத்து மணிக்கு மேல் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யலாம் என்று அறிவித்ததாக செய்தி வந்தது. தற்போது இரவு 10 மணிக்கு பிறகு வீடுகளில் உள்ள வாக்காளர்கள் விரும்பினால் மட்டுமே அவர்களின் வீடுகளுக்கு சென்று வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்றும், கதவைத் தட்டி பிரச்சாரம் செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இவ்வளவு குழப்பம்? இது போன்று, தினம் தினம் புதிய அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் வெளியிடுவதால் அரசியல்வாதிகளும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். மக்களும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். தெளிவான எழுத்துப்பூர்வமான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளிக்கலாமே!

மக்கள் விரும்பினால் பிரச்சாரம் செய்யலாம் என்றும், கதவைத் தட்டினால் புகார் அளிக்கலாம் என்றும் சொன்னால், அது எப்படி என்று யாருக்கும் புரியவில்லை. வீட்டின் கதவைத் தட்டிக் கேட்டால் தானே மக்கள் அதை விரும்புகிறார்களா, இல்லையா என்பது தெரியும்? என்னதான் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தான் தெளிவாக மக்களுக்கு விளக்க வேண்டும்" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x