

வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும், விஐடி பல்கலையும் சுகாதார துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
வேலூர்: சுகாதார துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) மற்றும் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் நிகழ்ச்சி நேற்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாலமன் சதீஷ் குமார் மற்றும் விஐடி பதிவாளர் ஜெயபாரதி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.
இதைத்தொடர்ந்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. இந்த ஒப்பந்தம் மூலம் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் விஐடி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் இணைந்து, சுகாதார துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க இணைந்து செயல்பட உள்ளனர்.
மேலும், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கல்வி மற்றும் அறிவியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிப்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
இந்நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. கடந்த 1948-ல் உலகின் முதல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்தியாவில் முதல் செவிலியர் கல்லூரி 1946-ல் தொடங்கப்பட்டது. 1961-ல் இந்தியாவின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1971-ல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1986-ல் இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே எப்போதும் தனித்துவமாக விளங்கி வருகிறது” என்றார்.
இதையடுத்து, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாலமன் சதீஷ்குமார் பேசும்போது, “இந்தியாவில் உயர்கல்வியில் முன்னணியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் பயோ இன்ஜினியரிங், பயோ இன்ஃபர்மேடிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகின்றன.
இந்த ஒத்துழைப்பு மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார தீர்வுகளை வழங்க முடியும்” என்றார். இதில், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநர் பிஜு ஜார்ஜ், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், சுகாதார அறிவியல் மற்றும் பொறியியல் துறை முதன்மையர் கீதா மணிவாசகம் மற்றும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (ராணிப்பேட்டை வளாகம்) இணை இயக்குநர் தீபக் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.