நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை

‘இந்து தமிழ் திசை’ - ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி
நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை

படங்கள் : எம்.சாம்ராஜ் |

Updated on
3 min read

புதுச்சேரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அளித்த ஊக்க உரை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் நான். இளங்கலை விவசாயம் பயின்ற போது, இறுதியாண்டில் யுபிஎஸ்சி படிக்க விருப்பம் ஏற்பட்டது.

தொடக்கத்தில் எனது அறிவைப் பெருக்க ‘தி இந்து’ நாளிதழைப் படிக்கத் தொடங்கினேன். அதன்பின் ‘இந்து தமிழ் திசை‘யுடன் தொடர்பு ஏற்பட்டு, தொடர்ந்து வாசிக்கிறேன்.

நான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற ஐந்து ஆண்டுகள் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்தவன். குடும்பச் சூழலால் பயிற்சி மையத்தில் படிக்க முடியவில்லை.

படித்து முடித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் கிடைத்த பணத்தை வைத்து யுபிஎஸ்சிக்கு தயாராக சென்னை சென்றேன். முதல்நிலை தேர்வுக்கு சென்றபோது அப்பாவுக்கு இரு சிறுநீரகங்களும் பழுதாயின.

ஒருவித நெருக்கடிக்கு மத்தியில் தயாரானேன். மூன்று முறை இன்டர்வியூ வரை சென்றேன். யுபிஎஸ்சி தேர்வுக்கு மனதளவிலும் தயாராக இருக்க வேண்டும். சற்று கடினமான பாதைதான். சில ஆண்டுகள் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்று வென்றால், நம் வாழ்க்கையேமாறிவிடும். யுபிஎஸ்சி தேர்வில் தோற்ற போது பலரும் எதிர்மறையாக சொன்னாலும் என் பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்தனர்.

உடனே வேலைக்குப் போக வற்புறுத்தவில்லை. பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையே நான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகி உங்கள் முன் நிற்பதற்கு காரணம்.

குழந்தைகள் மீது பெற்றோர் அழுத்தம் தரக்கூடாது. வேறு யாரேனும் யுபிஎஸ்சி தேர்வில் உடனே வென்றால் அதை வைத்து உங்கள் பிள்ளைகளை ஒப்பிடாதீர்கள்.

ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மாதிரியான அணுகுமுறை இந்தத் தேர்வில் இருக்கும். நிலையான தொடர் முயற்சி (consistency) நிச்சய வெற்றியைத் தரும். படிப்பதற்கு திட்டமிடுவது மட்டுமல்லாமல் உணவருந்துவதில் தொடங்கி உடற்பயிற்சி, மன அமைதி என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

குடும்ப நிகழ்வுகள், பண்டிகை கொண்டாட்டம், நண்பர்களுடன் ஊர்சுற்றல் என பல விஷயங்களை தியாகம் செய்ய வேண்டும். உங்கள் சுயஒழுக்கம் உங்கள் வெற்றியை இலகுவாக்கும். நிலையான தொடர் கற்றலை கைவிட்டால் வெற்றி தள்ளிப் போகும்.

30 வயது தாண்டினால் முடியாது, ஆங்கிலம் சரளமாக இருந்தால்தான் முடியும் என்பன போன்ற கருத்துகள் எல்லாம் பொய். நான் முதலில் இன்டர்வியூ சென்ற போது எனக்கு 31 வயது. நிர்வாக கோப்புகளைப் பார்த்து விரைந்து முடிவு எடுக்கும் அளவுக்கு ஆங்கிலத்திறன் இருந்தால் போதுமானது. இவ்வாறு பேசினார்.

வாசிப்பு மிக அவசியம் இந்நிகழ்வில் ஊக்க உரையாற்றிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் பேசியதாவது: என் பெற்றோர் அரசு ஊழியர்கள். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது எங்கள் பள்ளிக்கு சைலேந்திரபாபு வந்தார். அப்போது, ‘நீங்களும் ஓர் ஐபிஎஸ்’ என்ற அவரது புத்தகத்தை ஒரேநாள் இரவில் படித்து முடித்தேன். அதுவே என் முதல் விதை.

அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த போது, முதலில் வேறு விருப்பங்கள் இருந்தாலும், இறுதியாண்டில் யுபிஎஸ்சி மீது ஈர்ப்பு வந்தது. வார இறுதி பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.

அப்​போது​தான் நாளிதழ் படிக்​கும் பழக்​கம் அதி​க​மாகி, அது எனக்கு பெரிதும் உதவியது. டிகிரி முடித்த உடனே நான் வேலைக்கு செல்​லாமல் பயிற்சி எடுக்க எனது குடும்​பத்​தினரும் உதவினர். அதன்​பிறகு டெல்லி சென்று பயிற்சி வகுப்​பில் முழு நேரம் சேர்ந்​தேன். நாளிதழ் வாசிப்பது மிக அவசி​யம். வாசிக்​கும் போது முழுத்தகவல்களை​யும் ஏற்கெனவே தெரிந்து வைத்​திருக்க, அடுத்ததடுத்த வாசிப்பு சுலப​மாகிக் கொண்டே செல்​லும்.

இது​வெல்​லாம் ஆர்​வத்துடன் கூடிய பழக்​கத்​தில் வந்துவிடும். மாதிரி வினாக்​களை போட்​டுப் போட்​டுப் பார்க்க தன்​னம்​பிக்கை வந்​து​விடும். மனதில் இருப்பதை எழுத்​துப் பூர்​வ​மாக எடுத்து வர வேண்​டும். எழுத்​துப்​ப​யிற்​சியை இன்று முதல் இதற்​காக தொடங்கினால் பயன் தரும்.

நம் பர்​சனாலிட்​டியை வெளிக்​கொண்டு வரவே இன்​டர்​வியூவைக்​கிறார்​கள். அதனால்தான் அதற்கு ‘பர்​ச​னாலிட்டி டெஸ்ட்’ என்று பெயர். தெரி​யாததை, ‘தெரியாது’ என்று வெளிப்​படை​யாக சொல்வது எப்​போதும் சிறந்​தது. யுபிஎஸ்சி இன்​டர்​வியூ​வில் அது மிக முக்​கி​யம்.

நான் முதல் முறையே தேர்​வானேன். விருப்​ப​மான ஐபிஎஸ்-ஐ தேர்வு செய்து பணிக்கு வந்​திருக்கிறேன். சரி​யாக தயா​ரா​காமல் செல்​லாதோருக்​கு​தான் யுபிஎஸ்சி கடின​மானது. தொடர் முயற்​சி​யோடு விரும்பி படித்​தால் வெற்றி நிச்​ச​யம்.

கல்​வி​யில் சிறந்து விளங்​கும் ஒரு​வர்​தான் யுபிஎஸ்சி தேர்​வில் வெல்ல முடி​யும் என்ற கருத்து தவறானது. பட்​டப்​படிப்​பில் அரியர்​ஸ் வைத்​தவர்​கள் தொடங்கி பலரும் இந்​தத் தேர்வை வென்​றுள்​ளனர்.

முதல் முறையே யுபிஎஸ்​சியை வெல்வது கடினம் என்ற கருத்​தும் தவறானது.‘உங்​களுக்​குள் ஒரு கனவு தூங்க விடா​மல் இருக்க வேண்​டும்’ என்ற கலாமின் கனவு​களை கடைப்பிடி​யுங்கள். முழு ஆர்​வத்துடன் இருந்​தால் வெற்றி நிச்​ச​யம். இவ்வாறு அவர் பேசினார்.

கிங் மேக்​கர்​ஸ் ஐஏஎஸ் அகாடமி தலை​வர் - நிர்​வாக இயக்​குநர் பூமிநாதன் பேசுகை​யில், “ தொடர் முயற்​சி, அயராத உழைப்​பு, திட்​ட​மிடல் காரணமாக சாதாரண குடும்​பப் பின்​னணி​யில் இருந்து வந்த பலர் இன்று ஆட்​சி​யர்களாக, காவல்​துறை உயர் அதி​காரிகளாக உள்​ளனர்.

இங்கு உங்​கள் பிள்​ளை​களை அழைத்து வந்​திருக்கும் பெற்​றோர், சரி​யான நேரத்​தில், சரி​யான பாதை​யில் அவர்​களை இதற்​காக தயார்​படுத்​துங்​கள்” என்றார். தொடர்ந்து கிங் மேக்​கர்​ஸ் கருத்தாளர் ஆதில் பைக் யுபிஎஸ்சி தேர்​வுக்கான கருத்​துரைகளை வழங்​கி​னார்.

இந்​நிகழ்வை ஒருங்​கிணைத்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவி பொது மேலா​ளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்​றும் விற்​பனை பிரிவு) முரு​கேசன் பேசும்​போது, “எனது இருமகள்​கள் யுபிஎஸ்சி தேர்வை வெல்ல முக்​கியக் காரணம் இந்​நிகழ்ச்சியே.

6 ஆண்​டு​களுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ‘உனக்​குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்​சி​யில் அவர்​கள் முதலில் பங்கேற்றனர். அன்​றைய நிகழ்வு அவர்​களுக்கு சிறந்த ஒரு வழி​காட்​டி​யாக அமைந்​து, அவர்​களை வெற்றி பெற வைத்​தது. எளிமை​யான குடும்​பங்​களில் இருந்த பலரை​யும்​ உயர்​ பொறுப்​பு​களில்​ யுபிஎஸ்​சி அமர்த்​தி​யுள்​ளது” என்​று தெரி​வித்​தார்​.

நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in