சென்னை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கத் துறை கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆண்டுதோறும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கே (தொடக்கக் கல்வி) உள்ளது.
அதன்படி நடப்பாண்டு கடந்த ஆக.1-ம் தேதி நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணி நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும். அளிக்கப்படும் விவரங்கள் தவறானவை என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும்.
மேலும், எண்ணிக்கை குறித்த அறிக்கையை இயக்குநரகத்தில் அக்.21 முதல் 28-க்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். அந்தந்த மாவட்டக் கல்வி அதிகாரிகள் இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.