

மதுரை: நாடு முழுவதும் அரசு மருத்துவமனை கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகளுக்கு நாளை விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வழங்காமல் முதல் முறையாக கட்டாய வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி, முறைகேடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவே, தேசிய மருத்துவக் கவுன்சில் நிர்வாகம், இந்த ஏற்பட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தேசிய தேர்வு முகமை (NTA) அறிவிப்பின்படி, மருத்துவப் படிப்புக்கான (எம்பிபிஎஸ்) 2026-ம் ஆண்டுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வு நாளை மே 3 (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 552 நகரங்களில், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வை, 22 லட்சத்து 79 ஆயிரத்து 743 மாணவர்கள் எழுத உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 16 மையங்களில் 8,578 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
‘நீட்’ தேர்வு நடைபெறும் நாளை ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்காமல் கட்டாய வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் வடமாநிலங்களில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள், ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்ந்து, தேசிய மருத்துவக் கவுன்சில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: ‘மூட்டைக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாக, நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
‘நீட்’தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை, காதில் கம்மல் அணியக் கூடாது, செல்ஃபோன் உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட எந்த பொருட்களையும் தேர்வு மையத்துக்கு எடுத்து செல்லக் கூடாது என்று மிக கடுமையான சோதனைகள், கட்டுப்பாடுகளுடனேதான் அனுமதிக்கப்படுகின்றனர்.
அப்படியிருந்தும், இன்று இருக்கிற நவீன காலக் கட்டத்தில் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் ஏதாவது ஒரு வகையில் ‘நீட்’ தேர்வுகளில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் உதவியுடன் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கடந்த காலத்தில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனாலே, இன்று ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மருத்துவக் கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பி, அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களுக்கு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர், ‘நீட்’ தேர்வில் கடந்த காலங்களில் தேர்வு செயல்முறையின் புனிதத்தன்மையையும், நேர்மையையும் கெடுக்கும்வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன என்றும், அதனால், உரிய காரணங்கள், அத்தியாவசிய விடுமுறைக்கான அவசியம் தெரியாமல் மே 2 மற்றும் மே 3 ஆகிய தேதிகளில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் யாருக்கும் விடுமுறை வழங்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை, நீட் தேர்வில் நடக்கும் தவறான நடவடிக்கையை தடுப்பதற்கும், தேர்வை நேர்மையாக நடத்துவதற்கு எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏதோ ஒரு சில இடங்களில் ‘நீட்’ தேர்வுகளில் தவறுகள் நடந்தால் அவற்றை நடக்காமல் தடுப்பதற்கான பாதுகாப்பு கட்டமைப்புகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகப்படுத்தலாம்.
ஆனால், அதை விட்டுவிட்டு, மாணவர்களை எப்போதும் இல்லாத வகையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் கல்லூரிகளில் அடைத்து வைப்பது தவறான முன்னுதாரணமாகும்.
ஏராளமான மாணவர்கள், விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தற்போது கட்டாயமாக வகுப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், அவர்கள் சிரமப்பட்டு வர உள்ளனர்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.