

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்ற தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன.
மேற்கு வங்கத்தில் தேர்தல் எண்ணும் பணியில் மாநில அரசு பணியாளர்களோடு, மத்திய அரசுப் பணியாளர்களும், பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த சுற்றறிக்கைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜாய்மால்யா பஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “வாக்கு எண்ணும் பணியாளர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு. தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையை தவறு என்று கூற இயலாது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் கலவையை உள்ளடக்கியதாகவே அந்த சுற்றறிக்கை தெளிவாக உள்ளது.
ஏதேனும் முறைகேடுகள் நடக்கக் கூடும் என்று திரிணமூல் காங்கிரஸ் கொண்டிருக்கும் அச்சம் தேவையற்றது. அந்த சுற்றறிக்கை அதன் முழுமையான நோக்கத்துடனும் உணர்வுடனும் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. எனவே, திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.