

சென்னை: பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.
இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2026-27) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 12 (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.