

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக, 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வி ஆண்டில் (2026-27) 4 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ம் தேதியும், 1 முதல் 3-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே நாளில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
தவிர, வானிலை முன்னறிவிப்பு, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் ஆகியவை தொடர்பான ஆயத்த பணிகளையும் தமிழக அரசு ஆய்வு செய்தது. இவற்றை கவனமாக பரிசீலித்த பின்னர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 4-ம் தேதி திறக்கப்படும். இதற்கு தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
மேலும், இதற்கு பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டுமென திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.