

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் விஜய் முதல் முறையாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. முதல்வர் விஜய் உட்பட 35 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். தமிழக வரலாற்றிலேயே கூட்டணி அமைச்சரவை அமைத்த விஜய்யை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு சென்னை தலைமைச் செயலகத்துக்கு வார நாட்களில் தினமும் காலை 10 மணிக்குள் வருகை தரும் முதல்வர் விஜய், மாலை வரை இருந்து துறை அலுவல்களைக் கவனித்து வருவது அரசு ஊழியர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. முன்னதாக மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை அவர்களின் இல்லத்துக்கே சென்று முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கவுள்ளார். இதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் டெல்லி செல்கிறார். முதலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்துக்கு செல்லும் விஜய்க்கு, சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் சந்திக்கிறார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை விஜய் சந்திப்பது பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பின் போது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, வளர்ச்சித் திட்டங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒப்புதல்கள், மேகேதாட்டு அணை விவகாரம் உட்பட தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த விரிவான மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி குறித்தும் விஜய் பேசவுள்ளார்.
டெல்லியில் முன்னேற்பாடு: ஏற்கெனவே, தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை நிறைவு செய்ததும், முதல்வர் விஜய் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களையும் முதல்வர் விஜய் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆகியோரை விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யின் முதல் டெல்லி பயணம் என்பதால் பலதரப்பிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
69% ஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதால் தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்நாடு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று மே.27-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. எனவே, நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க, உரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வி.சம்பத் குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் வ.தட்சிணாமூர்த்தி, சட்டத் துறை செயலர் எஸ்.ஜார்ஜ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.