“பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை” - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: ‘வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்துக்காவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை’ என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கல்விக் கூடங்கள் காட்சிக் கூடங்கள் அல்ல. அரசியலின் மேடை அல்ல. அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் அறிவுப் பண்ணையாகும். இனிவரும் காலங்களில் பள்ளி வளாகங்களில் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதியில்லை.

அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளைத் தவிர்த்து, பிறந்தநாள் விழாக்களோ அரசு சாராத நிகழ்வுகளோ நடத்தக் கூடாது. எந்த அரசியல் கட்சியினரும், எந்தத் தனியார் அமைப்பினரும் நேரடியாக மாணவர்களைச் சந்திக்க அனுமதியில்லை.

மாணவச் செல்வங்கள் வகுப்பறையில் அமர்ந்து கற்கும் ஒவ்வொரு நொடியும், அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, இந்த நாட்டின் வருங்காலத்தை வடிவமைக்கும் பொன்னான நேரமாகக் கருதப்படுகிறது. அந்த நேரம் வெறும் பாட நேரமல்ல; கனவுகள் விதைக்கப்படும் நேரம், சிந்தனைகள் செழுமையாக்கும் நேரம், அறிவு பெருகும் நேரம், வருங்காலத் தமிழகம் தன் எண்ணங்களை வண்ணமயமாக செதுக்கும் நேரம்.

எனவே, வகுப்பு நடைபெறும் நேரத்தில் எந்தக் காரணத்திற்காகவும் யாரும் பள்ளிக்குள் நுழைவதோ, மாணவ, மாணவியரை நேரடியாகச் சந்திப்பதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மாணவர்களின் கவனமும், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்வதே நம் முதன்மைப் பொறுப்பு.

​பள்ளி வளாகங்கள் விழாக்களின் கூடாரமாக அல்ல, அறிவுத் தெளிவின் விழிப்புணர்வின் சிந்தனை மண்டபமாக மிளிர வேண்டும். புகழ் பரப்பும் இடமாக அல்ல, எதிர்காலத்தைப் படைக்கும் இடமாகத் திகழ வேண்டும்.

​எண்ணங்களைத் துளிர்விட்டு, கனவுகளுக்கு இறக்கை கட்டி, எண்ணுவதையெல்லாம் நனவாக்கும் ஆற்றலைப் பெறும் நம் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இன்னும் இன்னும் உயரப் பறக்கட்டும்.

அறிவிலும், பண்பிலும், சாதனைகளிலும் உலகம் வியக்கும் உயரங்களை எட்டட்டும். அரசுப் பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உரிய ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கல்விச் சூழலை உறுதிசெய்யும் வகையில் விரிவான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விரைவில் வெளியிடப்படும். அன்பு மாணவச் செல்வங்களே... நல்லதைப் படியுங்கள். நன்றாகப் படியுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையானது. அதேபோல், அரசுப் பள்ளிகளில் புகுந்து மாணவர்களிடம் ஆய்வு செய்வது, முதல்வர் விஜய்யின் படத்தை மாட்டுவது என தொடர்ந்து வெளிவரும் ரீல்ஸ்கள் தவெகவின் பெயரை டேமேஜ் செய்து வந்ததும் கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன்</p></div>
தவெகவை ஆக்கிரமிக்கும் அதிமுகவினர்... அலறும் ‘அசல்’ நிர்வாகிகள்... - விஜய்யின் ‘ஆக்‌ஷன்’ என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in