

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சி அரசினர் மேல்நிலை பள்ளியில் தொடுவானம் திட்டத்தில் மாணவரை ஊக்கப்படுத்தி பேட்ஜ் அணிவித்த மாவட்ட ஆட்சியர் ப்ரியா. அருகில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா உள்ளிட்டோர்.
ராணிப்பேட்டை: அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் ஆர்வம், தனித்திறன், ஆளுமை மற்றும் சமூக பொறுப் புணர்வை மேம்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும் பள்ளி கல்வி துறையும் இணைந்து 'தொடுவானம்' என்ற முன்னெடுப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்கும் சூழலை உருவாக்கும் வகையில் பள்ளி வளாகங்கள் பசுமையாகவும், தூய்மையாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. கல்வி என்பது பாடப்புத்தகங்கள் மற்றும் மதிப்பெண்களுடன் முடிந்துவிடாமல், மாணவர்களின் சிந்தனை திறன். ஒழுக்கம், உடல்நலம், சுற்றுச்சூழல் பாது காப்பு, தலைமை பண்பு உட்பட பல்வேறு திறன்களையும் மாணவர்களிடம் வளர்ப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பெருமைமிகு சீருடை: திங்கள் கிழமைகளில் பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகள் நடுதல், தண்ணீர் ஊற்றுதல், அவற்றை பராமரித்தல் உட்பட பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 'பசுமை நாயகன்' என்ற பாராட்டு வில்லை (பேட்ஜ்) வழங்கப்படுகிறது. மிடுக்கான சீருடை அணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 'பெருமைமிகு சீருடை' என்ற பாராட்டு வில்லையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்றனர். இதன் மூலமாக மாணவர்களிடம் தன்சுத்தம், ஒழுக்கம் மற்றும் பள்ளியின் மீது பெருமிதம் ஆகியவற்றை வளர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
வளரும் நட்சத்திரம்: பாட அறிவு, பொது அறிவு சார்ந்த விநாடி- வினா, கதை கூறுதல், விவாதம், கேள்வி எழுப்புதல் உட்பட செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. இதில், சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 'வளரும் நட்சத்திரம் என்ற பாராட்டு வில்லை வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களை பாடங்களை மனப்பாடம் செய்வதை தாண்டி சிந்தித்து கேள்வி எழுப்பவும், கருத்துகளை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கையுடன் பேசவும் ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
இலக்கிய நட்சத்திரம்: மாணவர்களிடம் பாட புத்தகங்களை கடந்து, வாழ்வியல் திறன்கள் மற்றும் விழுமிய கல்வி புத்தகங்கள், நூலக புத்தகங்கள், மாணவர் இதழ்களான 'தேன் சிட்டு', 'புது ஊஞ்சல்', வாசிப்பு இயக்கத்தின் சிறுகதை புத்தகங்கள் உட்பட பல்வேறு நூல்களை மாணவர்கள் வாசிக்கின்றனர். இதன் மூலம் வாசிப்பு திறன் மதிப்பீடு, புத்தக விமர்சனம், கருத்து விவாதம், புதிய கதை உருவாக்கம், கருத்து நாடக அரங்கேற்றம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல், பேச்சுப் போட்டி உட்பட பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த செயல்பாடுகளில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 'இலக்கிய நட்சத்திரம் எனும் பாராட்டு வில்லை அணிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் வாசிப்பு பழக்கம். படைப்பாற்றல், சிந்தனை திறன் மற்றும் தன்னம்பிக்கை மேம்படுத்தப்படுகிறது.
சுற்றுச்சூழல் வீரர்: பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மையாக பராமரித்தல், நெகிழி கழிவுகளை அகற்றுதல், கழிவுகளை வகைப்படுத்துதல், வீடு மற்றும் பள்ளியில் கழிவு மேலாண்மையை பின்பற்றுதல் உட்பட செயல்பாடுகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில், சிறப்பாக செயல்படுவோருக்கு 'சுற்றுச்சூழல் வீரர்' என்ற பாராட்டு வில்லை வழங்கப்படுகிறது.
உடல்நல நட்சத்திரம்: உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் அணிவகுப்பு நடைபயிற்சி உட்பட உடல்நலம் சார்ந்த செயல்பாடுகள் நடத்தப்படுகின்றன. இதில், சிறப்பாக பங்கேற்கும் மாணவர்களுக்கு 'உடல்நல நட்சத்திரம்' என்ற பாராட்டு வில்லை வழங்கப்படுகிறது.
இவ்வாறு வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், மாணவர்களின் திறன்களை அடையாளம் கண்டு தொடர்ந்து ஊக்கப்படுத்தும் சூழல் பள்ளிகளில் உருவாக்கப்படுகிறது. மாணவர்களை வெறும் மதிப்பெண் பெறுபவர்களாக மட்டுமின்றி, சிந்திக்கும் திறன், சமூக பொறுப்புணர்வு, ஒழுக்கம், உடல்நலம், சுற்றுச்சூழல் மீது அக்கறை மற்றும் தலைமை பண்பு கொண்ட ஆளுமைகளாக உருவாக்கு வதே 'தொடுவானம்' திட்டத்தின் நோக்கமாகும்.
மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வெளிக்கொண்டு வந்து தொடர்ந்து ஊக்கப்படுத்தும் இந்த முயற்சி மாவட்ட ஆட்சியர் ப்ரியா ஆலோசனையின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மோகனா மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கற்றல் சூழலுக்கு புதிய மாற்றத்தையும், மாணவர்களின் எதிர்கால பயணத்துக்கு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட கல்வி வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.