

ஐரோப்பிய சின்ன வல்லூறு
மேட்டூர்: மேட்டூர் அருகே பண்ணவாடியில் அரிய வலசைப் பறவையான ஐரோப்பிய சின்ன வல்லூறு, சேலம் மாவட்டத்தில் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர் அருகேயுள்ள பண்ணவாடிக்கு அரிய வகை வலசைப் பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. இவற்றைப் பதிவு செய்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பறவை ஆர்வலர்கள் பண்ணவாடிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த கவுரிசங்கர், சுந்தரமாணிக்கம் ஆகியோர் பண்ணவாடியில் ஐரோப்பிய சின்ன வல்லூறு பறவை வந்திருப்பதைப் பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் இப்பறவை பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து சிறகுகள் மற்றும் இயற்கை ஆராய்ச்சி கழகத்தினர் கூறியதாவது: பண்ணவாடியில் ஐரோப்பிய சின்ன வல்லூறு போன்ற அரிய இரைதேடும் பறவை பதிவாகியிருப்பது, இப்பகுதியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற பதிவுகள் தொடர்ச்சியான பறவை கண்காணிப்பு மற்றும் அறிவியல் ரீதியான ஆவணப்படுத்தலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
ஐரோப்பிய சின்ன வல்லூறு பால்கோனிடே குடும்பத்தைச் சேர்ந்த சிறிய அளவிலான இரைதேடும் பறவையாகும். இது ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து, குளிர்காலத்தில் தெற்குப் பகுதிகளுக்கு வலசை செல்கிறது. இந்தியாவில் அரிதாகக் காணப்படும் வலசைப் பறவையாக இது பதிவாகியுள்ளது.
பொதுவாக திறந்தவெளி புல்வெளிகள், விவசாய நிலங்கள் மற்றும் குறைந்த தாவர அடர்த்தியுள்ள பகுதிகளில் உணவு தேடும் இப்பறவை, வெட்டுக்கிளிகள், தட்டான்கள் போன்ற பெரிய பூச்சிகளை முக்கிய உணவாகக் கொள்கிறது. தேவைக்கேற்ப சிறிய ஊர்வன, கொறித்துண்ணிகள் உள்ளிட்ட சிறிய உயிரினங்களையும் பிடித்து உண்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் உருவாகியுள்ள சேற்றுப் பரப்புகள், மணல் திட்டுகள், சிறு தீவுகள், ஆற்றங்கரைப் பகுதிகள் மற்றும் திறந்தவெளி நிலப்பரப்புகள் பல்வேறு வகையான பறவைகள் உணவு தேடவும் ஓய்வெடுக்கவும் ஏற்ற வாழ்விடங்களாக உருவாகியுள்ளன.
இந்தச் சூழலில் ஐரோப்பிய சின்ன வல்லூறு பறவையின் பதிவு, பண்ணவாடி பகுதியின் பறவைப் பன்முகத்தன்மைக்கு முக்கிய ஆவணமாக அமைந்துள்ளது. தமிழ்நாடு வனத்துறை 2025-ம் ஆண்டு பதிவு செய்த ஆவணத்திலும் ஐரோப்பிய சின்ன வல்லூறு பறவை பட்டியலிடப்பட்டுள்ளது, என்றனர்.