

சென்னை: அரசு திரைப்படக் கல்லூரியில் டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி ஆகிய இரு படிப்புகளுக்கு மட்டும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 21-ம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில், டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு (ஆடியோகிராபி) ஆகிய இரண்டு பாடப்பிரிவுகளுக்கு மட்டும் நிர்வாக காரணங்களுக்காக, ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 27-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
எனவே, மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.