

புதுடெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), அண்மையில் வெளியிட்டுள்ள 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறை குறித்த பாடமும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடத்தில் நாட்டின் நீதித்துறை எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நீதித் துறையில் ஊழல், அதிக வழக்குகள் தேக்கம் அடைதல், நீதிபதிகள் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன் வந்த பாடப் புத்தகங்களில் முதன்மையாக நீதிமன்றங்களின் அமைப்பு, செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பங்கு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆனால் தற்போது இடம்பெற்றுள்ள பாடத்தில், நீதித்துறை அமைப்புக்குள் உள்ள ஊழலையும், குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு நீதி கிடைப்பதில் அதன் தாக்கம் குறித்தும் விவாதிக்கிறது. அதில், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 81 ஆயிரம் வழக்குகள் தேங்கியிருப்பதாகவும், உயர் நீதிமன்றங்களில் 62.40 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மாவட்டம் மற்றும் சார்பு நீதிமன்றங்களில் மொத்தம் 4.70 கோடி வழக்குகள் தேங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பாடத்தில் நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் மக்கள் ஊழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஏழைகள் மற்றும் சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு, இது நீதியை அணுகுவதில் உள்ள சிக்கலை மோசமாக்கி வருகிறது.
எனவே, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நீதித்துறை அமைப்பில் நம்பிக்கையை வளர்க்கவும் வெளிப் படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழல் சம்பவங்கள் எங்கு எழுந்தாலும் அவற்றை எதிர்த்து விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவும் மாநில மற்றும் யூனியன் பிரதேச நிலையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் என்சிஇஆர்டி பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் 2025-ல் பேசிய விஷயமும் இந்த பாடத்தில் இடம்பெற்றுள்ளது. அவர், நீதித்துறை அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையில் தவறான நடத்தை மற்றும் ஊழலின் தாக்கம் குறித்துப் பேசியது இந்தப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.