

கோப்புப் படம்
சென்னை: வரும் கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட்., பிஏ.பிஎட். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தற்போது கல்லூரிகளில் 3 ஆண்டு கால பட்டப் படிப்பை முடித்து அதன் பிறகு 2 ஆண்டு பிஎட் படித்தால் மொத்தம் 5 ஆண்டுகள் ஆகிவிடும். அதேநேரத்தில் ஒருங்கிணைந்த பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம். பிஎஸ்சி.,பிஎட்., பிஏ.,பிஎட். என்ற பெயரில் இந்த ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎட். படிப்பில் சேருவதால் ஓராண்டு காலம் மிச்சமாகும்.
எனவே ஆசிரியர் பணியில்சேர விரும்பும் மாணவர்கள் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎட் படிப்பில் சேர விரும்புகிறார்கள். இந்த படிப்பானது குறிப்பிட்ட சில கல்வியியல் கல்லூரிகளிலும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் வழங்கப்படுகின்றன.
சுற்றறிக்கை: இந்நிலையில், என்சிடிஇ-யின் உத்தரவைத் தொடர்ந்து வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு கால ஒருங்கிணைந்த பிஎட். பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன், 4 ஆண்டு ஒருங்கிணைந்த பிஎட். படிப்பை வழங்கும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அன்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. அதில், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்சி.,பிஎட். மற்றும் பிஏ.,பிஎட். பட்டப் படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாகவும், அப்படிப்புகளை நடத்தும் எந்த வொரு கல்வி நிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது அறிவிப்பின்படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பிஎஸ்சி.,பிஎட்., பிஏ.,பிஎட். பட்டப் படிப்புகளில் 2026-27-ம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அனுமதி இல்லை. என்சிடிஇ விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கை மேற்கொண்டால் அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.