

திருவண்ணாமலை: “தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி உள்ளிட்ட பலரையும் மாற்றியிருக்கிறார்கள். நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளைக் கழகமாக இப்போது மாறியிருக்கிறது” என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த கூட்டத்தில் அவர் பேசியது: “திருவண்ணாமலை என்றாலே ‘திமுக மலை!’ என்ற அளவுக்கு கட்சி தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை திருவண்ணாமலை திமுகவின் கோட்டையாக விளங்குகிறது. திருவண்ணாமலையை முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் தனி மாவட்டமாக உருவாக்கினார். இப்போது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் திருவண்ணாமலையை மாநகராட்சியாக தரம் உயர்த்தி இருக்கிறோம்.
திகைக்கும் அளவுக்கு, சாதனைகளால் நிறைந்ததுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆனால், இதற்கு நேர் எதிராக, வேதனைகளால் நிரம்பியதுதான் பழனிசாமியின் ஆட்சி. நான் லிஸ்ட் போட்டு சொன்னது போன்று, அவரிடம் சொல்ல சாதனைகள் இருக்கிறதா? அதனால்தான் ஊர் ஊராகச் சென்று மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று திட்டமிட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்.
பழனிசாமியைப் பொறுத்தவரையில், அவரும் ஒன்றும் செய்யவில்லை; நாம் செய்யும் நல்லதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் உரிமைத்தொகை கிடைக்கக் காரணமாக இருந்த, மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை கிடைக்கக் காரணமாக இருந்த, பல ஆண்டுகளாக கிடைக்காத பட்டா கிடைக்கக் காரணமாக இருந்த, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களை நடத்தக் கூடாது என்று கோர்ட்டுக்கு சென்று தடை கேட்டுச் சென்றார். ஆனால், என்ன ஆனது? கோர்ட்டில், பத்து லட்சம் ரூபாய் அபராதம் போட்டு அனுப்பிவிட்டார்கள்.
“இதற்கு மேலும் பேசினால் இருபது லட்சம் ரூபாய் ஃபைன் போடுவேன்” என்று நீதிபதி எச்சரித்து அனுப்பினார்கள். இப்போது சொல்கிறேன். ஆட்சிக்கு நாம்தான் வரப்போகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. வந்ததற்கு பிறகு, மீண்டும் இனிமேல், இந்த ஸ்டாலின் முகாம்கள் ஆண்டுதோறும் நடத்தப்படும். முடிந்தால் அதை “மக்கள் துரோக” பழனிசாமி தடுத்துப் பார்க்கட்டும்.
அதேபோன்று, நூறுநாள் வேலை திட்டத்திலும் கிராம மக்களுக்கு துரோகம் செய்தவர்தான் பழனிசாமி. நூறுநாள் வேலைத்திட்டம் எவ்வளவு முக்கியம் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். அதை ஒன்றிய பாஜக அரசு சிதைத்து, அதன் நோக்கத்தையே மாற்றிவிட்டார்கள். பெயரையும் மாற்றிவிட்டார்கள். அதைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தால்கூட நம்முடைய வாயில் நுழையாது. நூறு நாள் வேலைக்கான சம்பளம் போடவில்லை. புதிதாக வேலை தருவதையும் நிறுத்தி வைத்துவிட்டார்கள். வடக்கிலேயே பல மாநிலங்களில் மக்கள் கொந்தளித்துப் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திமுகவும், கூட்டணிக் கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி இருக்கிறோம். ஆனால், பழனிசாமி, இதுபற்றி என்ன பேசினார் தெரியுமா? “இனி 200 நாள் வேலை கிடைக்கப் போகிறது” என்று பெரிய உருட்டாக உருட்டினார். நூறு நாள் வேலையே ஒழுங்காக தராமல் இருக்கும் பாஜக அரசு, இப்போது 200 நாள் வேலை கொடுத்து அப்படியே அறுத்து தள்ளிவிடுவார்களாம். பாஜக-வின் ஏமாற்று திட்டத்திற்கு அடிமையாக இருக்கும் பழனிசாமி முட்டு கொடுத்ததைப் பார்த்து, டெல்லி நாடாளுமன்றமே ஆடிப் போய்விட்டது. இப்படித்தான், பாஜக அரசே வாபஸ் வாங்கிக் கொண்ட மூன்று வேளாண் சட்டத்திற்கும், முரட்டு முட்டு கொடுத்தார், டெல்லியின் முரட்டு அடிமையான பழனிசாமி.
அண்மையில்கூட, அவசர கதியில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிர்த்து, திமுக சார்பாக எவ்வளவோ முயற்சிகள் எடுத்தோம். இரண்டு மாதத்தில் தேர்தலை வைத்துக் கொண்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கக் கூடாது என்று போராடினோம். அரசு ஊழியர்களுக்கு பெரிய அளவில் கூடுதல் பணிச்சுமையும், மன அழுத்தமும் உண்டாகும் என்று கண்டித்தோம். முடிந்தவரை மக்களின் வாக்குரிமையை களத்தில் இறங்கி காப்பாற்றி இருக்கிறோம். இதில் கூட பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா? “தேர்தலையே ஒரு மாதத்தில் அறிவித்து நடத்துகிறார்கள், எஸ்ஐஆர் பணிகளை முடிக்க முடியாதா? என்று முட்டாள்தனமாக கேட்டார்.
பழனிசாமி அவர்களே… மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். ஏதாவது ஒரு விஷயத்திலாவது நீங்கள் டெல்லி ஓனர் பக்கம் நிற்காமல், தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நின்றிருக்கிறீர்களா? பாஜக அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எதிராகச் செய்யும் ஒரு செயலையாவது ரோஷம் வந்து கண்டித்து இருக்கிறீர்களா?
உலகம் அனைத்திற்கும் பொதுவானவர் திருவள்ளுவர். அவர் மேல் காவி சாயம் பூசினார்கள். அதை எதிர்த்து பழனிசாமி ஒரு வார்த்தை பேசியிருப்பாரா? அதனால்தான் கடைசியில் மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலை மேலேயே காவி பெயிண்ட் ஊற்றும் அளவுக்கு, சங்கி கலவரக் கும்பல் இறங்கிவிட்டார்கள்.
இந்திக்கும், சமஸ்கிருத வளர்ச்சிக்கும் பாஜக அரசு பூசணிக்காய் அளவுக்கு நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால், தமிழுக்கு பட்டாணி அளவுக்கு கூட ஒதுக்குவது இல்லை. இந்தத் துரோகத்தை எதிர்த்து பழனிசாமி பேசவே மாட்டார். அவருக்கு சுயமரியாதையும் கிடையாது, தமிழுணர்வும் கிடையாது.
கீழடி அறிக்கையை ஏன் வெளியிடாமல் இருக்கிறீர்கள்? என்று நாம் எத்தனை முறை பாஜக அரசை பார்த்து கேட்கிறோம். பழனிசாமி ஒப்புக்காவது இதைப் பற்றி பேசி பார்த்திருக்கீறீர்களா?
இதையெல்லாம்விட, பெரிய கூத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பழனிசாமி நடத்தியதுதான். “பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை” என்று வீராவேசமாக பழனிசாமி கொடுத்த வாக்குறுதி என்னாயிற்று? பச்சோந்தியைவிட வேகமாக பச்சை நிறத்திலிருந்து, மறுபடியும் காவி நிறத்திற்கு மாறி, இதிலும் துரோகம்தான் செய்தார்.
இன்னும் என்னவெல்லாம் துரோகம் செய்தார்? யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்று ஏற்கனவே நான் பெரிய பட்டியலே போட்டிருக்கிறேன். திராவிட மாடல் அரசின் சாதனைப் பட்டியல் மிக மிக நீளமானது. பழனிசாமியின் துரோகப் பட்டியல் அதைவிட பன்மடங்கு நீளமானது. சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு பழனிசாமியின் துரோகப் பட்டியல் பெரிதாக போய்க் கொண்டே இருக்கும்.
அதிமுகவும், பாஜகவும் தனிதனியாக வந்தாலும் சரி அல்லது கூட்டணியாக வந்தாலும் சரி, இரண்டும் வேறு வேறு இல்லையென்று தமிழ்நாட்டு மக்கள் சரியாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள்.
மக்கள் கொடுக்கும் தொடர் தோல்விகளில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாத இவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் என்ன தெரியுமா? அவதூறுகள், பொய் பிரசாரங்கள், மதக் கலவர சதித் திட்டங்கள்.
“திமுக அரசு இந்து விரோத அரசு” என்று பாஜக சொல்லும் பொய்யை பக்தர்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை. திராவிட மாடல் அரசு திருக்கோயில்களுக்கு செய்துகொண்டு இருக்கும் பணிகளைத்தான் மக்கள் தினமும் தங்களுடைய கண்களாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறார்களே.
ஆன்மிகத் தலமான திருவண்ணாமலையில் நின்று பெருமையோடு சொல்கிறேன். கடந்த 5 ஆண்டுகளில், 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு மேல் திருக்குடமுழுக்கு செய்திருக்கிறோம். பலநூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடக்காமல் இருந்த பல கோயில்களுக்கும் நாம்தான் செய்திருக்கிறோம்.
இதைவிட பாஜகவுக்கு எரிச்சல் தரும் விஷயம் என்ன தெரியுமா? நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, 5 ஆண்டுகளில், 8 ஆயிரத்து 435 கோடி ரூபாய் மதிப்பிலான, 8 ஆயிரத்து 107 ஏக்கர் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டிருக்கிறோம். நான் பொய் சொல்லவில்லை. ஆதாரத்துடன் சொல்கிறேன். அந்தத் தகவலை எல்லாம் இணையதளத்தில் பக்காவாக பதிவேற்றி இருக்கிறோம். சென்று பாருங்கள். மக்கள் இதையெல்லாம் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால்தான், திருவண்ணாமலை, மதுரை, காஞ்சிபுரம், திருச்சி என்று இருக்கக்கூடிய கோயில் நகரங்கள் எல்லாம் இன்றைக்கு திமுகவின் கோட்டையாக இருக்கிறது. இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.
இன்று மதியம் செய்தி வந்தது பார்த்தீர்களா? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரையும், ஆயுதப்படை காவல் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு டிஜிபி உள்ளிட்ட பலரையும் மாற்றியிருக்கிறார்கள். நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கிளைக்கழகமாக இப்போது மாறியிருக்கிறது.
நாம் கேட்பது என்ன? இதே தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார்கள்? தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது, நிர்வாகத்தில் அனைத்து ஒத்துழைப்பும் கிடைப்பதாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது கடந்த ஒரு வாரமாக அதிகாரிகளை மாற்றுகிறார்கள். என்ன அர்த்தம்? பாஜகவின் தலையீடு. பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் இப்படித்தான் அதிகாரிகளை கூண்டோடு மாற்றுகிறார்களா? பிஹாரில் தேர்தல் நடந்ததே, அங்கே இப்படித்தான் தலைமைச் செயலாளர், டிஜிபி-யை எல்லாம் மாற்றினார்களா?
இங்கே மட்டும் முக்கிய அதிகாரிகள், அதிலும் சேலம் கலெக்டர் போன்றவர்கள் மாற்றப்படுகிறார்கள் எனில், இது யாருக்கு உதவுவதற்காக நடக்கிறது என்று மக்களுக்கு சந்தேகம் வராதா? பழனிசாமி அவர்கள் நிற்கும் தொகுதியில், தான் நினைத்ததை செய்ய வேண்டும் என்று இது நடக்கிறதா? இதனால் எல்லாம் தி.மு.க-வின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அது முடியுமா? முடியவே முடியாது.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும், இன்னும் ஒரு மாதத்தில் திரும்ப நம்முடைய திராவிட மாடல் அரசுதான் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகிறது.
2021-லேயும் இப்படியான பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் மாபெரும் வெற்றியை திமுக கூட்டணி பெற்றோம். இப்பொழுதும் மீண்டும் வரலாற்று வெற்றியைப் பெறுவோம்.
நம்முடைய கவலையெல்லாம்… நேர்மையற்ற பாஜகவுக்காக, நேர்மையாக, நடுநிலையாக, அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் தன்னிச்சையாக இயங்க வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் உயரிய அமைப்பின் மதிப்பு இன்றைக்கு கேள்விக்குறி ஆகியிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவின் சுதந்திரமான தேர்தலுக்கு இது பேராபத்து. என்டிஏ கூட்டணிக்காக நடக்கும் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்கு தக்க பதிலடியை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கொடுக்க வேண்டும்.
என்டிஏ-வின் டப்பா எஞ்சின் வந்தால், இப்போது நான் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது. மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகள் எல்லாவற்றையும் கடந்து, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மக்கள் அனைவரும், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் ஆதரிக்க வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.