ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு

ஐஏஎஸ் தேர்வில் 289-வது இடம் பிடித்த ஹரிணியின் கிராமத்துக்குச் சென்று கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் பாராட்டு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கே.ஆர்.ஹரிணியை வீடு தேடி சென்று ஆட்சியர் கே.எம்.சரயு பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் மத்தூர் அருகே கருங்காலிப்பட்டி சேர்ந்த விவசாயி ரவி. இவரது மனைவி கோமதி. இவர் கெங்கிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் ஹரிணி (26). இவர், சிவில் சர்வீஸ் தேசிய அளவில் 289-வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறும்போது, ''ஹரிணி சிறுவயது முதலே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதில் ஆர்வத்துடன் படித்து வந்தார். பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்று, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர், சென்னை சங்கர் ஐஏஎஸ் அகடமியில் தொடர்ந்து 4 ஆண்டுகள் பயின்று, 4வது முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, பாளையங்கோட்டையில் வேளாண்மை அலுவலராக ஹரிணி பணியாற்றி வருகிறார். தற்போது ஐஏஸ் தேர்வில் மகள் வெற்றி பெற்றது மிகுந்த மிகழ்ச்சியை அளிக்கிறது'' என்றனர்.

வறுமை ஒழிப்பு, கிராமபுற வளர்ச்சி: ஹரிணி கூறும்போது, “ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு திட்டங்களை மக்களிடத்தில் கொண்டு சேர்க்க, ஐஏஎஸ் பணியை தேர்வு செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். வறுமை ஒழிப்பு, கிராமபுற வளர்ச்சி என்பது இலக்காக கொண்டுள்ளேன்'' என்றார்.

இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, கருங்காலிப்பட்டி கிராமத்துக்குச் சென்று ஹரிணிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, “ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்” என்றார். மேலும், அவருக்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த ஹரிணியின் பெற்றோருக்கும் வாழ்த்துகளை ஆட்சியர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in