Published : 15 May 2023 09:37 PM
Last Updated : 15 May 2023 09:37 PM

ஜூன் இறுதிக்குள் 6,000 பள்ளி வகுப்பறைகள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

பாபநாசம் அருகே ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்துவைத்தார்

கும்பகோணம்: "தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் தரமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் வருகிற ஜூன் மாத இறுதிக்குள் முடிவடைந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும்" என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் ஊராட்சி, வெள்ளாளர் தெருவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 10.92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக அளவில் அங்கன்வாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வருகின்றன. அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் அனைத்தையும் திங்கள்கிழமை காலை முதல் ஆய்வு செய்து வருகின்றேன். இந்த பணிகள் அனைத்தையும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் சுமார் ரூ.823 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் தரமாக கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜூன் மாத இறுதிக்குள் முடிந்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு வரும்.மேலும் இந்த வகுப்பறைகள் கல்லூரிகளுக்கு இணையாக உயரமாகவும் , அகலமாகவும் இருக்க வேண்டுமென முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

முதல்வரின் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஓராண்டில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க ரூ.4000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆரம்பப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. வருகிற ஜூன் முதல் வாரம் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு பணிகள் தொடங்கப்பட உள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், எம்பிக்கள் எஸ.கல்யாண சுந்தரம், செ.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன்,
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஊராட்சி மன்ற தலைவர் (பொறுப்பு) மகாலட்சுமி பாலசுப்ரமணியன், ஒப்பந்தக்காரர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x