Published : 14 Apr 2023 04:17 AM
Last Updated : 14 Apr 2023 04:17 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளைவரை (ஏப்.15) நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகிலஇந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நாடு முழுவதும் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கிடையே மாணவர்களின் நலன் கருதி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 2-வது முறையாக நாளை வரை (ஏப்.15) என்டிஏ நீட்டித்துள்ளது.

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x