Last Updated : 29 Jan, 2023 02:17 AM

 

Published : 29 Jan 2023 02:17 AM
Last Updated : 29 Jan 2023 02:17 AM

டெண்டர் காலதாமதம்: நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை இல்லை?

புதுச்சேரி: டெண்டர் காலதாமதத்தால் நடப்பு கல்வியாண்டில் புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது.

புதுவையில் கரோனா பரவலுக்கு பின் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது.
மாணவர்களுக்கு வழக்கமாக ஆண்டுக்கு 2 செட் சீருடை, தையல்கூலி வழங்கப்படும். அரசு இதுவரை சீருடை வழங்காததால் மாணவர்கள் வண்ண உடைகளில் பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என மாணவர் அமைப்பினர் பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெண்டர் விடுவதில் காலதாமதம், தர பரிசோதனை போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு சீருடை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறுகையில், "புதுவையில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு சீருடை வழங்க ரூ.6 கோடி அரசு நிதி ஒதுக்கியது. டெண்டர் மூலம் 2 நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டு சீருடை மாதிரிகளை பெற்று தர பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். இந்த பணி முடிய 45 நாட்களாகும். அதன்பின் சீருடை கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதனால் சீருடை வழங்க தாதமதம் ஏற்பட்டுள்ளது " என்று குறிப்பிட்டார்.

தற்போதைய சூழலில் சீருடை கொள்முதல் செய்ய இன்னும் 2 மாதமாகும். இதனால் ந டப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு சீருடை கிடைக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது அறிவித்துள்ள இலவச லேப்டாப், இலவச சைக்கிள் ஆகியவை தரும் வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, "பிப்ரவரியில் இலவச லேப்டாப், இலவச சைக்கிள் தருவதற்கான பணிகள் நடந்துவருகிறது" என்று அரசு தரப்பில் குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x