Published : 01 Aug 2022 06:33 PM
Last Updated : 01 Aug 2022 06:33 PM

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் போதுமான மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் இல்லை: மாணவர்கள் ஏமாற்றம்

மதுரை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பப்பதிவு தொடங்கிய நிலையில், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் போதுமான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகள் இல்லாததால் தென் மாவட்ட மாணவர்கள் விரும்பிய படிப்புகளை படிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நடப்பு 2022-2023ம் கல்வி ஆண்டில் (மருத்துவம்) தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் 19 வகையான மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பதிவு தொடங்கியது. வரும் 12-ம் தேதி மாலை 5 மணி வரை இந்த இணையதள விண்ணப்பப்பதிவு நடக்கும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பப்பதிவு முடிந்ததும் வரும் 16ம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி நர்சிங், பிஎஸ்சி ரேடியோ தெரபி, பிஎஸ்சி ஆப்டோமெட்ரி, பிஎஸ்சி மெடிக்கல் லெபரேட்டரி, பிஎஸ்சி ஆப்ரேசன் தியேட்டர் டெக்னாலஜி, பிஎஸ்சி பிசிஸியன் அசிடெண்ட், பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர கால படிப்பு உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 10 படிப்புகள் மட்டுமே உள்ளன.

பிஎஸ்சி ஆடியோலஜி/ஸ்பீச் தெரபி, பிபிடி(BPT) பிசியோ தெரபி, பிஎஸ்சி ரேடியோ கிராபி டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மனரி பெர்புசன், பிஎஸ்சி கார்டியோ டெக்னாலஜி, பிஎஸ்சி கிரிடிக்கல் கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி ரெஸ்பரேட்டரி டெக்னாலஜி, பிஎஸ்சி நியூரோ எலக்ட்ரோ பிசியோலஜி (Neuro electro physiology), பிஎஸ்சி கிளினிக்கல் நியூட்ரிசன், B.O.T Ocupational therapy போன்ற படிப்புகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இல்லை. அதேநேரத்தில் இந்த படிப்புகள் அனைத்தும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ளன.

இவற்றில் பல மருத்துவப் படிப்புகள் தற்போது தொடங்கிய புதுக்கோட்டை, திருண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் உள்பட சமீபத்தில் தொடங்கிய புதிய மருத்துவக் கல்லூரிகளில் கூட உள்ளன. ஆனால், சென்னைக்கு அடுத்து அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் கூடுதல் பேராசிரியர்கள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் கொண்ட மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த படிப்புகள் இல்லை. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், இல்லாத மருத்துவப் படிப்புகளை மருத்துவக் கல்வி இயக்ககத்திடம் கேட்டு பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் சிலர் கூறியது: "மதுரை அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம், எம்எஸ், எம்டி போன்ற பட்டமேற்படிப்புகள் மற்றும் டிஎம், எம்சிஎச் போன்ற ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் இல்லாத புதிய மருத்துவப்படிப்புகளை கொண்டு வருவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறது. மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி பிற வகை மருத்துவப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பிற சான்றிதழ் படிப்புகளை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.

இந்த படிப்புகளை கொண்டுவருது மிக சாதாரண விஷயம். 25 பக்கங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் மற்றும் சிகிச்சை விவரங்களை புரோபைலாக எழுதி அனுப்பி தேவைப்படும் புதிய மருத்துவம் சார்ந்த படிப்புகளை கேட்டாலே போதும் மருத்துவக்கல்வி இயக்ககம் நடப்பு கல்வி ஆண்டிலே கூட தொடங்க அனுமதி வழங்கிவிடும்.

அரசு வேலை இல்லாவிட்டாலும் தனியார் நிறுவனங்களிடம் கை நிறைய ஊதியம் பெற முடியும். ஆனால், இந்த மருத்துவம் சார்ந்த படிப்புகளை தொடங்குவதற்கு செல்வாக்குள்ள முக்கியத்துறை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்களே தடையாக உள்ளனர். இருக்கிற படிப்புகளை வைத்தே காலத்தை கடத்த முயற்சி செய்கின்றனர். அதனால், போதுமான மருத்துவம் சார்ந்த படிப்புகள் இல்லாததால் தென் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள், சென்னை மற்றும் மருத்துவக்கட்டமைப்பு இல்லாத பிற மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்று படிக்க வேண்டிய உள்ளது" என்று நிர்வாகத்தினர் கூறினார்.

மருத்துவக் கல்லூரி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: "போதுமான முக்கிய மருத்துவம் சார்ந்த படிப்புகள் உள்ளன. இல்லாத புதிய படிப்புகளை தொடங்குவதற்கு அதற்கான பேராசிரியர்கள், டெக்னீசியன்கள் தேவைப்படுகின்றனர். அதற்கான நடவடிக்கை எடுத்து புதிய படிப்புகள் தொடங்கப்படும்" என்று உயர் அதிகாரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x