Last Updated : 22 Jul, 2022 09:15 AM

 

Published : 22 Jul 2022 09:15 AM
Last Updated : 22 Jul 2022 09:15 AM

தாசநாயக்கன்பட்டி தொடக்கப் பள்ளியில் பல்லாங்குழி உள்பட பாரம்பரிய விளையாட்டுகளில் பாடம் பயிற்றுவிப்பு

சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கல்வி விளையாட்டு ஆய்வறையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை ஆய்வு செய்த சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம்

சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் கற்கும் வகையில், வகுப்பறையை விளையாட்டு ஆய்வறையாக மாற்றி பாடம் பயிற்றுவித்தல் மேற்கொள்ளப்படுகிறது.

ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளின் கற்றல் இடைவெளியைப் போக்கிட ‘எண்ணும் எழுத்தும்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் 1,858 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் 2,550 பேருக்கு, சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அத்திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், அத்திட்டத்தில் சங்ககிரி தாசநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை பாக்யலட்சுமி பயிற்சி பெற்றிருந்தார். அவர் 23 வகையான கல்விசார் விளையாட்டுகளை உருவாக்கி, வகுப்பறையை கல்வி விளையாட்டு ஆய்வறையாக மாற்றியுள்ளார்.

குறிப்பாக, பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம், பகடை போன்றவற்றின் விளையாட்டுக் கருவிகளில் எழுத்துகள், எண்கள், வார்த்தைகள், ஒருமை, பன்மை, எதிர்ச்சொற்கள், கணக்குகள் போன்றவற்றை இணைத்துள்ளார். இதனால், மாணவர்கள் எண்களையும், கணக்குகளையும், வாசித்தலையும், படித்தலையும் மகிழ்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தூண்டில் மீன், காகிதக்குவளையில் எழுத்துக்கள், எழுத்துக் கலப்படம், சொற்களஞ்சியப் பானை, சொற்கோபுரம், வண்ணத்துப்பூச்சி, எலியும் – பூனையும், பூட்டும்- சாவியும், படியில் ஏறு – இறங்கு, வாத்து – மீன், சமபாகம் பிரித்தல் மற்றும் விரல் வாய்ப்பாடு, எழுத்து நடை, எழுத்தின் மேல் குதித்தல், எழுத்தில் தாவுதல், எழுத்தில் நொண்டியடித்தல் போன்ற முறைகளில் பாடங்களை பயிற்றுவிப்பதால், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பாடங்களை பயின்று வருகின்றனர்.

இந்த கல்விசார் விளையாட்டு ஆய்வுக் கூடத்தை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் அன்பொளி, கோகிலா, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் கூறியதாவது:

தமிழகத்தில் முதல் முறையாக, வகுப்பறையை விளையாட்டு ஆய்வறையாக மாற்றி, தாசநாயக்கன்பட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியை சாதனை செய்துள்ளார்.

மனிதர்கள் உற்சாகமாக இருக்கும்போது, மூளையில் டோப்பமைன் என்ற திரவம் சுரக்கும். மாணவர்கள் விளையாட்டு ஆய்வறையில், பாடங்களை உற்சாகத்துடன் பயில்வதால், அவர்களுக்கு டோப்பமைன் சுரப்பு அதிகரித்து, அவர்கள் முழு நேரமும் உற்சாகமாக இருப்பர் என்பது அறிவியல் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x