Published : 21 Jun 2022 05:13 AM
Last Updated : 21 Jun 2022 05:13 AM

பிளஸ் 2 தேர்ச்சி | திருவள்ளூர்- 20, செங்கை- 22, காஞ்சி - 30வது இடம் - தேர்ச்சி விகிதத்தில் சதமடித்த 273 பள்ளிகள்

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: தமிழகத்தில் மே மாதம் நடத்தி முடிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தேர்வுத் துறை இயக்ககம் நேற்று வெளியிட்டது. இதில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் திருவள்ளூர் 20-வது இடமும், செங்கல்பட்டு 22-வது இடமும், காஞ்சிபுரம் மாவட்டம் 28-வது இடத்தையும் பிடித்தன. இந்த 3 மாவட்டங்களிலும் 273 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ன.

திருவள்ளூர் 93.60%

திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 93.60 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 371 பள்ளிகளைச் சேர்ந்த 42,408 பேர் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில், 39,695 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 106 அரசு பள்ளிகளில் 13,556 பேர் (86.24 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 2 அரசு பள்ளிகள், பூந்தமல்லி அரசு பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான பள்ளி உட்பட 140 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதனிடையே இந்த ஆண்டு தேர்ச்சி தரவரிசைப் பட்டியலில் 20-வது இடத்தை திருவள்ளூர் மாவட்டம் பிடித்துள்ளது.

செங்கல்பட்டு 93.34%

செங்கல்பட்டு மாவட்டத்தில் 32,690 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 15,439 மாணவர்களில் 13,966 பேர் தேர்ச்சி அடைந்தனர். 17,251 மாணவிகளில் 16,546 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.34 ஆக உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி தரவரிசைப் பட்டியலில் 22-வது இடத்தில் செங்கல்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 284 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இதில் 83 அரசு, நகராட்சி மற்றும் ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளும் 30 அரசு உதவிபெறும் பெறும் பள்ளிகளும் 171 மெட்ரிக்குலேஷன் மற்றும் சுயநிதி பள்ளிகளும் உள்ளன. இதில் வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 106 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் 91.80%

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 91.80 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 13,518 மாணவ, மாணவிகளில் 12,119 பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட (2019-2020) 0.2 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாணவர்களைவிட மாணவிகள் 6.08 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி தரவரிசைப் பட்டியலில் 30-வது இடத்தில் காஞ்சிபுரம் உள்ளது.

மாவட்டத்தில் 3 அரசுப் பள்ளிகள் உட்பட 27 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 52 அரசுப் பள்ளிகளில் 87.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3 மாவட்டங்களிலும் 10-ம் வகுப்பில் 87,327 பேர் தேர்ச்சி

கடந்த 2021-22-ம் கல்வியாண்டுக்கான 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 86.65 சதவீத மாணவர்களும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88.48 சதவீத மாணவர்களும் திருவள்ளூரில் 88.97 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன்படி மொத்தம் 87,327 மாணவ மாணிவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.48 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தேர்வை 187 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 7,873 மாணவர்களும், 7593 மாணவிகளும் என மொத்தம் 15,466 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இவர்களில் 13,684 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 83.75 சதவீதம் பேரும் மாணவிகள் 93.38 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 அரசுப் பள்ளிகள் உட்பட 32 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 36,521 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 31,647 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 86.65 ஆக உள்ளது. மாணவர்கள் 18,314 பேரும் மாணவிகள் 18,207 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 14,829 மாணவிகள் 16,818 தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 10 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 634 பள்ளிகளைச் சேர்ந்த 47,202 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 41,996 பேர் (88.97 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 230 அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 79.65 சதவீதமாக உள்ளது. 8 அரசு பள்ளிகள், பூந்தமல்லி அரசு பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கான பள்ளி உட்பட 185 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x