Last Updated : 19 Jun, 2022 09:15 AM

 

Published : 19 Jun 2022 09:15 AM
Last Updated : 19 Jun 2022 09:15 AM

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அமைச்சர் அறிவித்த நீதிபோதனை வகுப்புகள் நீர்த்துப் போனதா?

பள்ளிகள் திறந்த ஒரு வாரம் முழுவதும் நீதி போதனை வகுப்புகள்நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு ஒருவாரம் ஆன நிலையில் இதுவரை எந்தப் பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.

கோடை விடுமுறை முடிந்துகடந்த 13-ம் தேதி முதல் அனைத்துபள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வருகை புரிந்த மாணவர் களை சில அமைச்சர்களும், ஆசிரி யர்களும் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றனர். அவர்களுக்கு பாடப் புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் அன்றே வழங்கப்பட்டன. அதே நேரத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப் பப்பட்ட சுற்றறிகையில், உடற்கல்வி ஆசிரியர்கள் வேலை நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திடவும், ஒவ்வொரு வகுப்புக்கும்வாரம் இரண்டு பாடவேளைகள், உடற்கல்விக்காக ஒதுக்கப்பட் டுள்ள நேரத்தில் மாணவர்கள் அனைவரையும் விளையாட வைக்க வேண்டும்.

வாரத்தில் ஒரு நாள், பள்ளி நேரம் முடிந்ததும் கூட்டு உடற்பயிற்சியும், தினமும் காலை வணக்க கூட்டம் நடத்த வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்தபின், 20 நிமிடம் ஐந்தாம் பாட வேளை ஆசிரியர்கள் வழியாக, மாணவர்கள் சிறுவர் பருவ இதழ், நாளிதழ்கள், பள்ளி நுாலகத்தில் உள்ள நுால்கள் போன்றவற்றை வாசிக்க செய்ய வேண்டும்.

வாரத்திற்கு ஒரு நாள் அனுபவப் பகிர்வு, நீதிபோதனை பாட வேளை ஒதுக்கப்பட்டதோடு, பள்ளிகளில் ஒரு வாரத்திற்கு பாடங்கள் நடத்தாமல் புத்துணர்வு பயிற்சியும், நல்லொழுக்கம் மற்றும் உளவியல் ரீதியான வகுப்புகளும் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான பாடங்களை அட்டவணைப்படி நடத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவை கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்றதா என அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் கேட்ட போது, "எல்லாமே அறிவிப்பு தான். நடைமுறையில் இதுவெல்லாம் சாத்தியமே இல்லை. பல பள்ளி களில் உடற்கல்வி ஆசிரியரே இல்லாத நிலையில், காகிதத்தில் எழுதிய சர்க்கரை என்ற வார்த்தை இனித்து விடாது" என்றனர்.

அரசுப் பள்ளிப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் க.திருப்பதி கூறுகையில், "அமைச்சரின் அறிவிப்பு, மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மனதை நெறிப்படுத்தும் பாடங்கள் எவை? நெறி என்றால் எத்தகைய நெறி? யாருக்கான நெறி? ஆரோக்கியம், விளையாட்டு பற்றிய பாடத் திட்டங்கள் எவை? எந்தந்த தலைப்பில் நடத்த வேண்டும்? யாரை கொண்டு நடத்த வேண்டும்? நடத்தவில்லை யென்றால் என்னவாகும்? என்று எதையும் குறிப்பிடாத போது, இது வெற்று வார்த்தை தான் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது" என் றார்.

இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, "அட்மிஷன், புத்தக விநியோகம், வகுப்புக் கால அட்டவணை, மாணவர்களை கண் காணித்தல் போன்ற பல்வேறு பணிச்சுமைகளுக்கு இடையே நீதிபோதனை வகுப்புகளை நடத்தஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி யிருந்தோம். ஒரு சில பள்ளி களில் இந்த வகுப்புகளை நடத்தி யுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x