கிருஷ்ணகிரியில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் 5,895 மையங்கள் மூடல் - காரணம் என்ன?

ஓசூர் அருகே அத்திமுகம் பகுதியில் செயல்படும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட மையத்தில் பயிலும் மாணவர்கள். (கோப்புப் படம்)

ஓசூர் அருகே அத்திமுகம் பகுதியில் செயல்படும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட மையத்தில் பயிலும் மாணவர்கள். (கோப்புப் படம்)

Updated on
2 min read

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் 5,402 தன்னார்வலர்கள் பணியை கைவிட்டதால் 5,895 மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்க தமிழக அரசு சார்பில், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் மாலை நேரத்தில் மாணவர்களின் வீட்டின் அருகே தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத் திட்டத்தில் 7,997 மையங்கள் தொடங்கப்பட்டன.

கடந்த 2 ஆண்டுகளில் 5,402 தன்னார்வலர்கள் பணியை கைவிட்டதால், 5,895 மையங்கள் மூடப் பட்டுள்ளன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் சம்பத்குமார் மற்றும் கல்வி ஆர்வலர்கள் கூறியதாவது: மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்த தமிழகத்தில் ரூ.200 கோடி நிதியில், ‘இல்லம் தேடிக் கல்வி’ தி்ட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டம் கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இத்திட்டம் சூளகிரி அருகே பெரிகுத்தி, சின்னகுத்தி, அத்திமுகம் உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களுக்கு கிடைக்காத நிலை இருந்தது.

தற்போது பல்வேறு காரணங்களை காட்டி, படிப்படியாக மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதனால், இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் தோல்வியடைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எனவே, கல்வியில் பின்தங்கியுள்ள கிராமங்களை ஆய்வு செய்து, ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

அதேபோல தன்னார்வலர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். மேலும், இடைநின்ற தன்னார்வலர்களுக்கு ஊதியம் வழங்குவதாக மோசடி நடைபெற வாய்ப்புள்ளதால், இதுதொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மையங்களை மூட காரணம் என்ன? - கல்வித்துறை வட்டாரங்களில் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ’இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தில் 2021-22-ல் ரூ.79.97 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 7,997 மையங்கள் தொடங்கப்பட்டன.

2022-23-ல் ரூ.88.21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, 8,821 மையங்களும், 2023-24-ல் ரூ.85.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 8,510 மையங்களும், 2024-25-ல் ரூ.31.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 3,108 மையங்களும், தற்போது (2025-26) ரூ.21.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 2,102 மையங்களும் செயல்படுகின்றன.

தன்னார்வலர்கள் பல்வேறு பணிகளுக்குச் சென்றதாலும், பல பெண்கள் திருமணமாகி சென்றதாலும், கடந்த 2 ஆண்டுகளில் 5,402 தன்னார்வலர்கள் பணியை கைவிட்டனர். இதனால், 5,895 மையங்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது, கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 984 மையங்களும், ஓசூர் கல்வி மாவட்டத்தில் 1,118 மையங்களும் என மொத்தம் 2,102 மையங்கள் செயல்படுகின்றன. இதில் 2,102 தன்னார்வலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 16,677 மாணவர்கள், 18,105 மாணவிகள் என மொத்தம் 37,782 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.

<div class="paragraphs"><p>ஓசூர் அருகே அத்திமுகம் பகுதியில் செயல்படும், ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்ட மையத்தில் பயிலும் மாணவர்கள். (கோப்புப் படம்)  </p></div>
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கானூர் தர்காவில் தீப வழிபாடு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in