

அவிநாசியை அடுத்த சேவூர் அருகே கானூரில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் ஏற்றப்பட்ட தீபங்களால் ஜொலித்த தர்கா.
திருப்பூர் / ஊட்டி: அவிநாசி வட்டம் சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு, தக்னி சுன்னத் ஜமாத் மஸ்ஜித் முஹம்மத் ஷா வலி தர்கா உள்ளது. இந்த தர்கா, தமிழ்நாடு வக்பு வாரியத்தால் இணைக்கப்பட்டது. இங்கு, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருநாளன்று, தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை யொட்டி, தர்காவில் தீபம் ஏற்றி அப்பகுதி மக்கள் வழிபட்டனர். இதுகுறித்து தர்கா நிர்வாகிகள் கூறும்போது, ‘‘தர்காவில் தொழில் விருத்தி, திருமணம், குழந்தை பாக்கியம் என எந்த வொரு வேண்டுதல் வைத்தாலும் நிறைவேறுவதாக மக்கள் நம்புகின்றனர்.
எனவே, இந்த தர்காவுக்கு ஜாதி, மதம், இனம் பாராமல் அனைத்துத் தரப்பு மக்களும் வருகின்றனர். கார்த்திகை தீபத்தின்போது தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு சிறந்த உதாரணமாக இந்த தர்கா விளங்குகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு உரூஸ் விழாவில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று வழிபடுகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கடந்த 3-ம் தேதி மாலை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று (டிச.5) மாலை 3-ம் நாளாக தீபம் ஏற்றுவார்கள். பல ஆண்டுகாலமாக 3 நாட்கள் தீபம் ஏற்றி மக்கள் வழிபடுகின்றனர்’’ என்றனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஊட்டி நஞ்சநாடு கிராம மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில் கல்தூணில் நெய்தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்றோர்.
கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள கோயில் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, படுக சமுதாய மக்கள் வசிக்கும் கிராமங்களில் ‘லக்கிச்சா’ என்ற பெயரில், லட்ச தீப விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக, ஊட்டி நஞ்சநாடு கிராம மையப் பகுதியில் அமைந்துள்ள கோயில் கல்தூணில், மாலை 6 மணிக்கு நெய் தீபம் ஏற்றப்பட்டது. விழாவில், கிராம மக்கள் அனைவரும் பாரம்பரிய கலாச்சார உடை அணிந்து, பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இவ்விழாவையொட்டி நஞ்சநாடு கிராமமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.