

சென்னை: சென்னை மியூசிக் அகாடமி நடத்தும் 3 ஆண்டு கால கர்னாடக இசை பட்டயப் படிப்புக்கு (அட்வான்ஸ்டு டிப்ளமா) தகுதியுள்ள மாணவர்கள் ஜூன் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மியூசிக் அகாடமி, மேம்பட்ட இசைப் பள்ளியாக மாணவர்களை மேடைக் கச்சேரி செய்யும் அளவுக்கு தயார் செய்வதையும், இசை மேதைகளிடம் நேரடியாகப் பயின்று நுணுக்கங்களை கற்றுக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இசைத் துறையில் சிறந்து விளங்க விரும்பும் மாணவர்களுக்காக சென்னை மியூசிக் அகாடமியில் நடத்தப்படும் உயர்தர கர்னாடக இசை பட்டயப் படிப்புக்கு (அட்வான்ஸ்டு டிப்ளமா) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது 3 ஆண்டுப் படிப்பாகும். இதில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் நவம்பர் வரை, ஜனவரி முதல் ஏப்ரல் வரை என 2 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும்.
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சென்னை மியூசிக் அகாடமி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு பருவத்தின் இறுதியிலும் தேர்வுகள் நடத்தப்படும்.
இப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். வர்ணங்கள், கீர்த்தனைகள் பாடும் திறமையும், மனோதர்ம சங்கீதத்தில் போதிய ஞானமும் இருக்க வேண்டும்.
3 ஆண்டுப் பயிற்சியின் நிறைவில் மாணவர்கள் கற்றறிந்த பாடல்கள் மற்றும் நிரவல் நுணுக்கங்களைச் சோதிக்கும் வகையில், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில் கச்சேரியும் நிகழ்த்த வேண்டும்.
இதற்கான விண்ணப்பத்தை மியூசிக் அகாடமியின் www.musicacademymadras.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, இசைப் பயிற்சி குறித்த விவரங்களுடன் மின்னஞ்சல் வழியாக ஜூன் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 044-28112231, 28116902, 28115162 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.