

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அக்கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நாளை (16-ம் தேதி) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய நீட் தேர்வு முறை தமிழக மாணவர்களை கடுமையாக பாதித்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கூறி, நடந்து முடிந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு 22 லட்சத்துக்கும் அதிகமானோரின் எதிர்காலம் நிலை குலைத்துள்ளது.
இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் ஒருங்கிணைக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளும்.