உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை

உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகள் - அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க நடவடிக்கை
Updated on
1 min read

சென்னை: ஜேஇஇ, நிட் தேர்வுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்ஒருபகுதியாக இந்த மாதம் முதல் உயர்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி நடப்பு மாதம் ஜேஇஇ முதன்மைத் தேர்வு, தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனத் தேர்வு (NID- NATIONAL INSTITUTE OF DESIGN) ஆகியவற்றுக்கான விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவம்பர் 22-ம் தேதி வரையும், நிட் தேர்வுக்கு டிசம்பர் 2-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், கட்டணம் மற்றும் தகுதிகள் உட்பட கூடுதல் விவரங்கள் இதனுடன் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட போட்டித் தேர்வுகள் தொடர்பான தகவல்களை பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு தெரியப்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in