Published : 06 May 2024 05:25 AM
Last Updated : 06 May 2024 05:25 AM

தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு

நீட் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி முன்பு பெற்றோருடன் குவிந்த தேர்வர்களால் கூட்டம் அலைமோதியது. படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். வினாத்தாளில் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேலான தேர்வு மையங்களில் நேற்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.3 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதினர்.

தாம்பரம் அடுத்த சாய்ராம் கல்லூரி தேர்வு மையத்தில் நடந்த தீவிர சோதனையால் தலை விரிகோலமாக தேர்வு கூடம் செல்லும் மாணவி ஒருவர். படம்: எம்.முத்துகணேஷ்

தேர்வு எழுத வந்த மாணவர்களை 12.30 மணிக்கு பின்னர் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர ஆதார் அட்டை, புகைப்படம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும், தோடு, கொலுசு, நகைகள், காப்பு, செல்போன் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே மாணவர்கள் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமென என்டிஏ கூறியிருந்தது. அதன்படி 1.30 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், மாணவ, மாணவிகளுடன் வந்த பெற்றோர் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்பட்டு காக்க வைக்கப்பட்டனர். மேலும், தேர்வு அறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, ‘‘உயிரியல், வேதியியல் பிரிவு கேள்விகள் எளிதாக இடம்பெற்றிருந்தன. இயற்பியல் பிரிவில் மட்டும் பல வினாக்கள் பதிலளிக்க கடினமாக இருந்தன. குறிப்பாக இயற்பியலில் கணக்கீடு தொடர்பான கேள்விகளுக்கு அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. அதேபோல், சில வினாக்களுக்கு 2 விதமான பதில்களும் பொருந்துமாறு கேட்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால் நேர மேலாண்மையை திறம்பட கையாள முடியவில்லை’’ என்றனர்.

தேர்வு வளாகத்தில் காத்திருந்த மாணவர்களின் பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது .

மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகளை துரிதமாக முடித்து நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக என்டிஏ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையே அதிமுக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மகள் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நீட் தேர்வை எழுதினார். தேர்வு மையத்துக்கு அவரை விஜயபாஸ்கரும், அவரின் மனைவியும் அழைத்து வந்திருந்தனர்.

இதுதவிர சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் இருந்த தேர்வு மையத்துக்கு வந்திருந்த மாணவர்கள், பெற்றோருக்கு வேப்பேரி போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பாண்டிவேல் ஏற்பாட்டில் மோர், தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x