Published : 25 Apr 2024 06:10 AM
Last Updated : 25 Apr 2024 06:10 AM

குறுகிய கால எம்பிஏ படிப்புக்கு அனுமதியில்லை: மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

சென்னை: நம்நாட்டில் திறந்தநிலை, தொலைதூர மற்றும் இணைய வழிக் கல்வி வாயிலாக கற்று தரப்படும் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும்.

இந்நிலையில் ‘10 நாட்களில் எம்பிஏ படிப்பு’ என்றவாறு மாணவர் சேர்க்கை விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. இத்தகைய போலியான அறிவிப்புகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று யுஜிசி தற்போது எச்சரித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:

சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உயர்கல்வியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் படிப்பு திட்டங்களை குறுகிய காலத்தில் இணையவழியில் படிக்கலாம் என விளம்பரம் செய்கிறார்கள். அதில் ஒன்றுதான் 10 நாட்களில் எம்பிஏ படிப்பு திட்டமாகும்.

யுஜிசி விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்கள் இணையவழி படிப்புகளை பயிற்றுவிக்க யுஜிசியிடம் ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல் deb.ugc.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனுடன் எம்பிஏ என்பது 2 ஆண்டு முதுநிலைப் படிப்பாகும்.

இது வணிகம் - மேலாண்மைகூறுகளை பல்வேறு கோணங்களில் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதனால் எம்பிஏ படிப்பை 10 நாட்களில்முடிக்க முடியாது. எனவே, எந்தவொரு இணையவழி படிப்பில் சேரும் முன்னர் அதற்கு அங்கீகாரம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x