Published : 14 Mar 2024 03:38 PM
Last Updated : 14 Mar 2024 03:38 PM

பதக்க வேட்டையாடும் கணிதப் புலிகள் | உலக கணித நாள்

ஆறு இந்தியர்கள் விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் என்று பெருமை சேர்த்திருக்கிறார்கள். அர்ஜூன் குப்தா, ஆனந்த ப​தூரி, சித்தார்த் சோப்ரா, அர்சித் மானஸ், வெங்கட கணேஷ், அதுல் நதிக் ஆகியோர்தான் இந்தப் பதக்கங்களை வென்றவர்கள். கலந்து கொண்ட 112 நாடுகளில் இந்தியாவுக்கு ஒன்பதாவது இடம் கிடைத்திருக்கிறது.

இவர்கள் விளையாட்டில் சாதனை படைக்கவில்லை. உடல் திறமைக்கு மாறாக மூளைக்கு சவால் விடும் ஒன்றில் சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். அது கணிதவியல். ஜப்பானில் சென்ற ஆண்டு நடைபெற்ற சர்வதேச கணிதவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்களை நம் நாட்டுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

மேலே குறிப்பிட்டவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள். சர்வதேச கணித ஒலிம்பியாட் என்பது என்ன என்பதை அறிந்தால் இந்த சாதனையின் வீச்சு தெளிவுபடும். பல நாட்டு மாணவர்கள் பங்கு கொள்ளும் ஒரு சர்வதேச கணிதவியல் போட்டி இது.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் எந்தப் பள்ளி மாணவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். 20 வயதிற்கு உட்பட்டவராக போட்டியாளர் இருக்கவேண்டும். சர்வதேச கணித நிறுவனம் (IMO) என்ற அமைப்பு நடத்தும் போட்டி இது.

முதன்முதலில் இந்த போட்டி 1959இல் ருமேனியாவில் நடந்தது. ​ அப்போது வெறும் ஏழு நாடுகள்தான் இதில் கலந்து கொண்டன. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் இதில் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றன. ஆறு மாணவர்களைக் கொண்ட குழுவாக இதில் பங்கேற்கலாம். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு தனிநபர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். உலக அளவில் பெரும் அங்கீகாரம் இந்த விருதுக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் ஆறு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதில் கலந்து கொள்ள முடியும். எண் கோட்பாடு, இயற்கணிதம், சேர்வியல், வடிவியல் போன்ற நான்கு கணித உட்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

‘ஹானரபிள் மென்ஷன்’ - இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க அதிக நேரம் ஆகும். புதிய முறையில் சிந்திக்கும் அவசியமும் நேரிடும். இறுதிச் சுற்றில் கலந்து கொள்பவர்களுக்கு ஆறு கேள்விகள் கேட்கப்படும். முதல் நாள் மூன்று கேள்விகள், இரண்டாம் நாள் மூன்று கேள்விகள் என்று கேட்கப்படும். ஒவ்வொரு நாளும் தீர்வுகளை அளிக்க நான்கரை மணி நேரம் வழங்கப்படும்.

ஒரு தீர்வுக்கு அதிகபட்சம் ஏழு மதிப்பெண்கள். எனவே ஒரு மாணவர் அதிகபட்சம் 42 மதிப்பெண்கள் பெறமுடியும். இப்படி பங்கேற்கும் மாணவர்களின் மதிப்பெண்களைக் கூட்டி கிடைக்கும் மொத்த மதிப்பெண்கள் மூலம் தரவரிசை தயார் செய்யப்படுகிறது. ஒரு நாட்டின் ஆறு மாணவர்களும் அனைத்துக் கேள்விகளுக்கும் முழுமையாக தீர்வு அளித்தால் அந்த நாட்டுக்கு 252 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதிகபட்ச மதிப்பெண்கள் பெறும் முதல் மூன்று நாடுகளுக்கும் முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் அளிக்கப்படும். எந்த கேள்விக்காவது மிக அற்புதமாக எதிர்பாராத கோணத்தில் விடை அளிக்கும் மாணவர்களுக்கு ‘ஹானரபிள் மென்ஷன்’ என்ற கெளரவம் வழங்கப்படும்.

மும்பையில் உள்ள ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தில் மேற்படி ஒலி​ம்பியாடில் பங்கேற்க மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இயற்பியல், வேதியல், உயிரியல், வானியல் போன்ற பல சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களை இங்கு தயார் செய்கிறார்கள். மேலே குறிப்பிட்ட போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு, அவர்கள் இந்தியா திரும்பியதும் இந்த மையத்தில் பாராட்டு விழா நடைபெறும்.

அடுத்த ஒலிம்பியாட் வரும் ஜூலை 11 முதல் 22 தேதி வரை பிரிட்டனில் உள்ள பாத் நகரில் நடைபெறுகிறது. இதுவரை இந்தியா 34 தங்க பதக்கங்களை வென்றுள்ளது. என்றாலும் நமக்கு முன்பாக 25 நாடுகள் உள்ளன. எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் நாம் முன்னேற வேண்டிய தூரம் அதிகம்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x