Published : 04 Mar 2024 09:14 PM
Last Updated : 04 Mar 2024 09:14 PM

2024-25 கல்வியாண்டில் 6-ம் வகுப்பு சேர்க்கையின்போது பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடக்கம்: தமிழக அரசு

அமைச்சர் அன்பில் மகேஸ் | கோப்புப்படம்

சென்னை: தமிழகத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் 2024-2025 ஆம் கல்வியாண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளியிலேயே புதியதாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வரின் சீரிய முயற்சியால் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மாணவர்களின் கற்றலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாவண்ணம் அவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் “நேரடி பயனாளர் பரிவரித்தனை” (DBT) முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இப்பணியினை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அத்தருணத்திலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். இதன்வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் சிரமம் பெருமளவில் குறைக்கப்படும்.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையினைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக்கும் நேர்விலும், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் தருணத்திலும் சாதிச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன. இந்நால்வகைச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றுவருகின்றனர்.

தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைத்திடும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வரும் கல்வியாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவணங்களை பள்ளித்தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கும்போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த் துறையினருக்கு அனுப்பிவைக்கப்படும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு (EMIS) தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நல்வாய்ப்பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x